2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 117 இந்திய விளையாட்டு வீரர்களில் 24 பேர் ராணுவ வீரர்கள் – ஈட்டி எறிதல் வீரர் சுபேதார் நீரஜ் சோப்ரா மீண்டும் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்.

2024 ஜூலை 26 முதல் தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று நாட்டிற்குப் பெருமை சேர்க்க 117 இந்திய விளையாட்டு வீரர்கள் தயாராக உள்ளனர். இவர்களில் இருபத்தி நான்கு பேர் ஆயுதப்படை வீரர்கள் ஆவார்கள். இந்த 24 விளையாட்டு வீரர்களில், நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் சுபேதார் நீரஜ் சோப்ரா உட்பட 22 ஆண்கள், இரண்டு பெண்கள் உள்ளனர். ராணுவ சேவைகளில் உள்ள பெண்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

2022 காமன்வெல்த் விளையாட்டு வெண்கலப் பதக்கம் வென்ற ஹவில்தார் ஜெய்ஸ்மின் லம்போரியா, 2023 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற சிபிஓ ரீத்திகா ஹூடா ஆகிய இரண்டு பெண் சேவை வீரர்கள் முதல் முறையாக ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இவர்கள் முறையே குத்துச்சண்டை, மல்யுத்தத்தில் இடம்பெற்றுள்ளனர்.

அமித் பங்கல் (குத்துச்சண்டை); சிபிஓ தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்),  அவினாஷ் முகுந்த் சேபிள் (3000 மீ ஸ்டீபிள்சேஸ்), உள்ளிட்டோரும் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நோக்கில் செயல்பட உள்ளனர்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 24 வீரர், வீராங்கனைகள் தவிர, 5 அதிகாரிகளும் பாரிஸ் செல்கின்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் ராணுவத்தினரின் பங்கேற்பு, விளையாட்டு கலாச்சாரத்தை வளர்ப்பதில் ஆயுதப்படைகளின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது நாடு முழுவதும் விளையாட்டு உணர்வை மேம்படுத்துகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply