இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த பராமரித்தல், பழுது நீக்குதல் மற்றும் புதுப்பித்தல் (எம்.ஆர்.ஓ) வசதிகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிறுவனங்கள் பெறுவதற்கான வலுவான சூழலை உருவாக்குவதில் அரசின் உறுதியாக உள்ளதென, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு வலியுறுத்தினார். எம்.ஆர்.ஓ துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து எழுப்பப்பட்ட கவலைகளுக்கு பதிலளித்த அமைச்சர், “நாங்கள் இந்திய விமான நிறுவனங்களின் தேவைகளில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், திருவனந்தபுரம் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உட்பட, எம்.ஆர்.ஓ சேவைகளைப் பயன்படுத்த சர்வதேச கேரியர்களை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று கூறினார்.
எம்.ஆர்.ஓ கூறுகள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி அடுக்குகளை ஒன்றிணைப்பதாக, இந்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது, இது உள்நாட்டு எம்.ஆர்.ஓ.க்களை உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைக்க உதவும். 1,100 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கான உள்நாட்டு விமான நிறுவனங்களின் சமீபத்திய ஆர்டர், அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் எம்.ஆர்.ஓ தொழில்துறையின் அளவை 2 பில்லியன் டாலரில் இருந்து 4 பில்லியன் டாலராக இரட்டிப்பாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையில் இதனைத் தெரிவித்த மத்திய அமைச்சர் திரு. ராம்மோகன் நாயுடு, எம்.ஆர்.ஓ துறையை வலுப்படுத்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மேற்கொண்டுள்ள முக்கிய முன்முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டினார்:
1. எம்.ஆர்.ஓ சேவைகளுக்கான தேவை: இந்தியாவில் எம்.ஆர்.ஓ சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதை அமைச்சர் ஒப்புக் கொண்டார், மேலும் உள்நாட்டு கடற்படைகளுக்கு மட்டுமல்லாமல், சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் சேவை செய்ய அரசாங்கத்தின் லட்சியத்தை வெளிப்படுத்தினார். “இந்தியாவின் புவியியல் நன்மை பல சர்வதேச விமான நிறுவனங்களுக்கு எம்.ஆர்.ஓ வசதிகளை வழங்க அனுமதிக்கிறது, இது எங்களை ஒரு போட்டித்தன்மையுடைய உலகளாவிய பங்குதாரராக ஆக்குகிறது” என்று அமைச்சர் மேலும் கூறினார்.
2. உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் ஒருங்கிணைப்பு: எம்.ஆர்.ஓ தொழில்துறை உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் ஒருங்கிணைக்கப்படுவது குறித்த கவலைகளை அமைச்சர் உரையாற்றினார், இந்திய எம்.ஆர்.ஓ வசதிகளை சர்வதேச தரத்துடன் ஒத்திசைக்க முயற்சிகள் நடந்து வருவதை உறுதிப்படுத்தினார். “எங்கள் எம்.ஆர்.ஓ துறை உலகளாவிய நடைமுறைகளுடன் ஒத்துப்போவதை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், சர்வதேச விமான நிறுவனங்களுக்கு இந்தியாவை விருப்பமான இடமாக மாற்றுகிறோம்” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
3. எம்.ஆர்.ஓ.க்களுக்கான PLI திட்டம்: வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் திறனை அமைச்சர் எடுத்துரைத்தார். தொழில்துறையின் தேவையைப் பொறுத்து, அதன் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்த, எம்.ஆர்.ஓ தொழில்துறைக்கு பி.எல்.ஐ திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்று அவர் கூறினார்.
4. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்: எம்.ஆர்.ஓ சேவைகளுக்கான ஜிஎஸ்டி கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தத்தை ராம் மோகன் நாயுடு எடுத்துரைத்தார். முன்னதாக, விமான பாகங்கள் மீதான 5%, 12%, 18% மற்றும் 28% மாறுபட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் சவால்களை உருவாக்கின, இதில் தலைகீழ் வரி அமைப்பு மற்றும் எம்ஆர்ஓ கணக்குகளில் ஜிஎஸ்டி குவிப்பு ஆகியவை அடங்கும். ஆனால் 12 ஜூலை 2024 அன்று ஒரு முக்கிய முடிவு அறிவிக்கப்பட்டது, இதன்படி, சுங்க கட்டணச் சட்டம், 1975 இன் அத்தியாயத்தைப் பொருட்படுத்தாமல் விமானம்/விமான என்ஜின்கள் மற்றும் APU-ன் அனைத்து பாகங்களுக்கும், ஒரே மாதிரியான IGST @5% பொருந்தும். “ஜூலை 15, 2024 முதல் நடைமுறைக்கு வரும் இந்த வரலாற்று முடிவு, வரிவிதிப்பு செயல்முறையை எளிதாக்வதோடு 2031 ஆம் ஆண்டில் MRO தொழில்துறையை 4 பில்லியன் டாலர் மதிப்பீட்டை நோக்கி நகர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அமைச்சர் கூறினார்.
5. எம்.ஆர்.ஓ வசதிகளுக்கான ஆதரவு மற்றும் ஊக்கத்தொகை: உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிறுவனங்களுக்கான எம்.ஆர்.ஓ வசதிகளை உருவாக்க, இந்தியா முழுவதும் உள்ள பங்குதாரர்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உதவும். இந்த முயற்சிகளின் வெற்றியை உறுதி செய்வதற்காக அனைத்து கொள்கை மற்றும் ஒழுங்குமுறை ஆதரவை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
6. சுங்க வரி விலக்கு மற்றும் அந்நிய நேரடி முதலீட்டு வசதி: மத்திய பட்ஜெட் அறிவிப்புகளின் ஒரு பகுதியாக, பழுதுபார்ப்புக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான காலத்தை, 6 மாதங்களில் இருந்து 1 வருடமாக அரசாங்கம் நீட்டித்துள்ளது. கருவிகள் மற்றும் கருவித்தொகுப்புகள் மீதான சுங்க வரியிலிருந்து ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, MROக்களுக்கான தானியங்கி பாதை வழியாக 100% அந்நிய நேரடி முதலீட்டை (FDI) அரசாங்கம் அனுமதித்துள்ளது, இது சிறந்த டர்ன் அரவுண்ட் நேரத்தை (TAT) அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
MRO துறை, அதன் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக தேவையான அனைத்து ஒழுங்குமுறை மற்றும் கொள்கை செயலாக்கங்களுடன் ஆதரவளிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
திவாஹர்