பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் 2024, ஆகஸ்ட் 13 அன்று, செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்து, தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப் பணி தன்னார்வலர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் முயற்சிகளைப் பாராட்டினார்.
பின்னர், 78-வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களிடையே உரையாற்றிய அவர், நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரர்கள் எப்போதும் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக இருப்பார்கள் என்று கூறினார். தேசிய மாணவர் படையினர் எதிர்கால வீரர்கள் என்றும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பராமரிக்க வலுவான தூணாக இருப்பார்கள் என்றும் அவர் விவரித்தார். “சமூக சேவை மற்றும் சமூக மேம்பாட்டின் பல முயற்சிகளை மேற்கொண்டு மாற்றத்தின் பெரும் சக்தியாக நீங்கள் செயல்படுகிறீர்கள் என்று கூறினார்.
தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம், தூய்மை இந்தியா இயக்கம், சர்வதேச யோகா தினம் போன்ற பல தேசிய இயக்கங்களில் நீங்கள் பணியாற்றியுள்ளீர்கள் என்றும், இவற்றை அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் வெற்றி பெறச் செய்துள்ளீர்கள் என்றும் குறிப்பிட்டார். இப்போதும், சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை வெற்றிகரமாக நடத்த கடுமையாக உழைத்து வருகிறீர்கள் என்று கூறினார்.
பிரதமர் திரு மோடியின் “தற்சார்பு பாரதம்” மற்றும் “வளர்ச்சியைடந்த பாரதம்” என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் தேசிய மாணவர் படையினர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று பாதுகாப்புத் துறை இணையமைச்சர் கூறினார்.
தேசிய மாணவர் படையினரின் உற்சாகம் மற்றும் மன உறுதியை பாராட்டிய திரு சஞ்சய் சேத், அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
திவாஹர்