பிரேசில் கடற்படைத் தளபதி அட்மிரல் மார்கோஸ் சம்பாயோ ஓல்சன் இந்தியா வருகை.

பிரேசில் கடற்படைத் தளபதி அட்மிரல் மார்கோஸ் சம்பாயோ ஓல்சென் 2024, ஆகஸ்ட் 19 முதல் 24 வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், கடல்சார் பாதுகாப்பில் பகிரப்பட்ட சவால்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அட்மிரல் மார்கோஸ் சம்பாயோ ஓல்சென் 2024, ஆகஸ்ட் 21 அன்று புதுதில்லியில் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதியை சந்தித்தார். தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் விவாதங்களை நடத்தினார்.

இந்திய கடற்படை பிரேசில் கடற்படையுடன் பல்வேறு முன்முயற்சிகள் மூலம் ஒத்துழைத்து வருகிறது, இதில் செயல்பாட்டு கலந்துரையாடல்கள், பயிற்சி ஒத்துழைப்பு மற்றும் பிற கடல்சார் நடைமுறைகள் அடங்கும். மிலன் மற்றும் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா கடல்சார்  பயிற்சி போன்ற பலதரப்பு மன்றங்களிலும் இரு கடற்படைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு அந்தந்த பாதுகாப்பு அமைச்சகங்களால் வழிநடத்தப்படும் கூட்டு பாதுகாப்பு குழு மூலம் மேற்கொள்ளப்படுகிறதுள தனது உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, பிரேசில் கடற்படைத் தளபதி தில்லியில் பாதுகாப்பு செயலாளர், தேசிய கடல்சார் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ராணுவத் தளபதி ஆகியோரையும் சந்திக்க உள்ளார். இந்தப் பயணத்தின்போது, அட்மிரல் மார்கோஸ் சம்பாயோ ஓல்சென் குருகிராமில் உள்ள இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள தகவல் இணைப்பு மையத்திற்கும் சென்று பல்வேறு பாதுகாப்புத் தொழில் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார்.

புதுதில்லி தவிர, பிரேசில் கடற்படைத் தளபதி மும்பைக்கும் செல்கிறார். அங்கு அவர் மேற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி கமாண்டிங் இன் சீஃப் உடன் கலந்துரையாடுவார், அத்துடன் உள்நாட்டு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் பார்வையிடுவார்.  

திவாஹர்

Leave a Reply