மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் நடைபெற்ற லட்சாதிபதி சகோதரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் இன்று  (25.08.2024) நடைபெற்ற லட்சாதிபதி சகோதரிகள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். தற்போதைய அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் சமீபத்தில் லட்சாதிபதி ஆன 11 லட்சம் புதிய லட்சாதிபதி சகோதரிகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். நாடு முழுவதிலும் உள்ள லட்சாதிபதி சகோதரிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.

4.3 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 48 லட்சம் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் ரூ.2,500 கோடி சுழல் நிதியை திரு நரேந்திர மோடி விடுவித்தார். 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 25.8 லட்சம் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் ரூ.5,000 கோடி வங்கிக் கடன்களையும் அவர் வழங்கினார். லட்சாதிபதி சகோதரிகள் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, ஏற்கனவே ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றப்பட்டுள்ளனர். மேலும் மூன்று கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திரண்டிருந்த பெருந்திரளான தாய்மார்கள், சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் தமது உரையைத் தொடங்கினார். நேபாளத்தின் தனாஹூன் நகரில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். விபத்து நடந்தவுடன் அதிகாரிகள் தங்கள் நேபாள சகாக்களைத் தொடர்பு கொண்டதாகவும், மத்திய அமைச்சர் ரக்ஷதாய் காட்சே நேபாளத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் உடல்கள் சிறப்பு விமானப்படை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகக் கூறிய பிரதமர், மத்திய, மாநில அரசுகள் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

லட்சாதிபதி சகோதரிகள் மாநாடு என்ற இந்த மாபெரும் நிகழ்ச்சியில் தாய்மார்கள், சகோதரிகள் பெருந்திரளாக கலந்து கொண்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு நரேந்திர மோடி, இன்று, இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6,000 கோடிக்கும் அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்த நிதித் தொகுப்பு பல பெண்களை லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார். அவர்களுக்குப் பிரதமர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் தாய்மார்கள், சகோதரிகள் மாநிலத்தின் புகழ்பெற்ற கலாச்சார, பாரம்பரியத்தின் பார்வையை அளிக்கிறார்கள் என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். மகாராஷ்டிராவின் பாரம்பரியம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அறியப்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். அண்மையில் போலந்து சென்றிருந்தபோது மகாராஷ்டிரத்தின் கலாச்சாரத்தை நேரில் கண்டதாக குறிப்பிட்ட பிரதமர், மகாராஷ்டிர மக்கள் போலந்து நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள் என்றார். போலந்து மக்களால் கோலாப்பூர் மக்களின் சேவை, விருந்தோம்பலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோலாப்பூர் நினைவகம் குறித்தும் அவர் பேசினார். சிவாஜி மகராஜ் வகுத்த மரபுகளை பின்பற்றி போலந்து அரச குடும்பத்தினரால் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகளுக்கு அடைக்கலம் அளிக்கப்பட்ட இரண்டாம் உலகப் போர்க் காலகட்டத்தை நினைவு கூர்ந்த பிரதமர், தமது போலந்துப் பயணத்தின்போது இதுபோன்ற வீரம் சார்ந்த கதைகள் தமக்கு விவரிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மக்களும் இதேபோன்ற பாதையைப் பின்பற்றி, உலகில் இந்த மாநிலத்தின் பெயரை உயர்த்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மகாராஷ்டிராவின் கலாச்சாரம் அந்த மண்ணின் துணிச்சலான மற்றும் தைரியமான பெண்களின் படைப்பு என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஒட்டுமொத்த இந்தியாவும் மகாராஷ்டிராவின் மகளிர் சக்தியால் உத்வேகம் பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். நமது ஜல்கான் வர்கரி பாரம்பரியத்தின் ஆலயமாகும் எனவும் இது மாபெரும் துறவி முக்தாயின் நிலம் என்றும் அவரது சாதனைகளும், தவமும் இன்றைய தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply