பிரதமர் திரு நரேந்திர மோடி 2014 ஆகஸ்ட் 28 அன்று தொடங்கி வைத்த பிரதமரின் மக்கள் வங்கித் திட்டம் வெற்றிகரமாக இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்தது. பிரதமரின் மக்கள் வங்கித் திட்டம் உலகின் மிகப் பெரிய நிதி உள்ளடக்க முன் முயற்சி திட்டமாகும். மத்திய நிதியமைச்சகம் நிதிசார் நடவடிக்கைகள் மூலம் விளிம்பு நிலை மக்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.
மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள செய்தியில், நிதி உள்ளடக்கம் மற்றும் அதிகாரமளித்தலை அடைவதற்கு முறையான வங்கி சேவைகளுக்கான உலகளாவிய மற்றும் குறைந்த செலவிலான அணுகுமுறை அவசியம் என்று கூறியுள்ளார். இது ஏழைகளை பொருளாதார ரீதியில் ஒருங்கிணைக்கிறது என்றும் விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
“வங்கிக் கணக்குகள், சிறு சேமிப்புத் திட்டங்கள், காப்பீடு மற்றும் கடன் உள்ளிட்ட உலகளாவிய, குறைந்த செலவிலான, முறையான நிதி சேவைகளை வழங்குவதன் மூலம், பிரதமரின் மக்கள் வங்கித் திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வங்கி மற்றும் நிதி சூழலை மாற்றியுள்ளது” என்று மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்.
மக்கள் வங்கித் திட்டத்தில் கணக்குகள் தொடங்கப்பட்டதன் மூலம் 53 கோடி மக்கள் முறையான வங்கி அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டதில் இந்த முயற்சியின் வெற்றி பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வங்கிக் கணக்குகள் ரூ.2.3 லட்சம் கோடி வைப்பு இருப்பைப் பெற்றுள்ளன. இதன் விளைவாக 36 கோடிக்கும் அதிகமான விலை இல்லா ரூபே அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது ரூ. 2 லட்சம் விபத்து காப்பீட்டுத் தொகையையும் வழங்குகிறது. குறிப்பாக, கணக்கு தொடங்குவதற்கான கட்டணம் அல்லது பராமரிப்பு கட்டணங்கள் எதுவும் கிடையாது, குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை” என்றும் திருமதி சீதாராமன் கூறியுள்ளார்.
67% கணக்குகள் கிராமப்புற அல்லது சிறு நகர்ப்புற பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளன என்பதும், 55% கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன என்பதும் மகிழ்ச்சியளிப்பதாக மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் வங்கிக் கணக்கில் – மொபைல் – ஆதார் இணைப்பு ஆகியவை நிதி உள்ளடக்கத்திற்கான மிக முக்கியமான தூண்களாகும் என்று அவர் தெரிவித்தார். இது அரசின் நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகளுக்கு விரைவாக, தடையற்ற, வெளிப்படையான பரிமாற்றத்திற்கு உதவுவதுடன் டிஜிட்டல் பணப் பட்டுவாடாவை ஊக்குவிக்கிறது என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியையொட்டி மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்தியில், “பி.எம்.ஜே.டி.ஒய் (பிரதமரின் மக்கள் வங்கித் திட்டம்) என்பது ஒரு திட்டம் மட்டுமல்ல, வங்கிச் சேவை பெறாத பல மக்களுக்கு நிதி சுதந்திரத்தை சாத்தியமாக்கியுள்ளது மற்றும் நிதி பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.
பிரதமர், தனது 2021 சுதந்திர தின உரையில், ஒவ்வொரு வீட்டிற்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்றும், வயது வந்த ஒவ்வொருவருக்கும் காப்பீடு மற்றும் ஓய்வூதிய பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றும் அறிவித்தார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொடர் இயக்கங்களோடு இந்த திசையில் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், வங்கிக் கணக்குகளில் நாம் கிட்டத்தட்ட நிறைவை அடைந்துள்ளோம், மேலும் நாடு முழுவதும் காப்பீடு மற்றும் ஓய்வூதிய பாதுகாப்பில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று திரு சவுத்ரி கூறினார்.
“அனைத்து பங்குதாரர்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளின் ஆதரவுடன், நாங்கள் நிதி ரீதியாக உள்ளடக்கிய சமூகத்தை நோக்கி நகர்கிறோம், மேலும் நாட்டில் நிதி உள்ளடக்கத்திற்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக பி.எம்.ஜே.டி.ஒய் (பிரதமரின் மக்கள் வங்கித் திட்டம்) எப்போதும் நினைவில் கொள்ளப்படும். பிரதமரின் மக்கள் வங்கித் திட்டம் இலக்கு எட்டும் ஒரு முக்கிய உதாரணமாக விளங்குவது மட்டுமல்லாமல், மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் ஒரு அரசு எவற்றையெல்லாம் சாதிக்க முடியும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது” என்று திரு சவுத்ரி கூறினார்.
பிஎம்ஜேடிஒய் (பிரதமரின் மக்கள் வங்கித் திட்டம்) வங்கிச்சேவை இல்லாத ஒவ்வொரு வயது வந்தவருக்கும் ஒரு அடிப்படை வங்கிக் கணக்கை வழங்குகிறது. இந்த கணக்கிற்கு எந்த இருப்பையும் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை மற்றும் இந்த கணக்கில் எந்த கட்டணமும் விதிக்கப்படாது. இந்த கணக்கில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ரூபே டெபிட் கார்டு மற்றும் 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. பிரதமரின் மக்கள் வங்கித் திட்டத்தில் (பிஎம்ஜேடிஒய்) கணக்கு வைத்திருப்பவர்கள் அவசர செலவுகளை ஈடுகட்ட 10,000 ரூபாய் வரை மிகைப்பற்று பெறவும் தகுதியுடையவர்கள்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பி.எம்.ஜே.டி.ஒய் (பிரதமரின் மக்கள் வங்கித் திட்டம்) தலைமையிலான தலையீடுகளின் பயணம் மாற்றத்தையும் திசையையும் உருவாக்கியுள்ளது, இதன் மூலம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவன சுற்றுச்சூழல் அமைப்பு சமூகத்தின் கடைசி நபருக்கு – ஏழையிலும் ஏழைகளுக்கு நிதிச் சேவைகளை வழங்கும் திறன் கொண்டதாக உள்ளது.
பிஎம்ஜேடிஒய் பிரதமரின் மக்கள் வங்கித் திட்டத்தின் கீழ் உள்ள கணக்குகள் நேரடி பலன் பரிமாற்றங்களைப் பெறுவதில் கருவியாக இருப்பது மட்டுமல்லாமல், எந்தவொரு இடைத்தரகர்கள், தடையற்ற பரிவர்த்தனைகள் மற்றும் சேமிப்பு திரட்டல் இல்லாமல் உத்தேச பயனாளிக்கு அரசாங்கத்தால் தொந்தரவு இல்லாத மானியங்கள் / கொடுப்பனவுகளுக்கான தளமாகவும் செயல்படுகின்றன. மேலும், ஜன் சுரக்ஷா திட்டங்கள் (நுண் காப்பீட்டுத் திட்டங்கள்) மூலம் கோடிக்கணக்கான அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டை வழங்குவதில் அவை முக்கியமானவை.
ஜன்-தன் ஆதார் மற்றும் மொபைல் (ஜேஏஎம்) ஆகியவற்றுக்கு பிரதமரின் மக்கள் வங்கித் திட்டம் ஒரு தூணாக உள்ளதோடு, அது அரசின் மானியங்கள் பயனாளிகளுக்கு நேரடியாக சென்றடைவதை உறுதிசெய்கிறது. ஜேஏஎம் திட்டத்தின் மூலம், நேரடி பலன் பரிமாற்றத்தின் கீழ், அரசு வெற்றிகரமாக மானியங்கள் மற்றும் சமூக நன்மைகளை பின்தங்கியவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றியுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா