வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ஐ அடைய, நிலக்கரி வெளியேற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நிலக்கரி அமைச்சகம் துரிதப்படுத்துகிறது.

இந்தியாவின் நிலக்கரித் துறையை மாற்றியமைக்கும் இடைவிடாத முயற்சியில், நிலக்கரி அமைச்சகம் உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவாகக் கண்காணிப்பதையும், முக்கிய பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான உத்தியை முன்னெடுத்து வருகிறது. 2047-ம் ஆண்டுக்குள், வளமான மற்றும் வளர்ந்த நாடு என்ற பரந்த இலக்குடன் இணைந்து, நீடித்த நிலக்கரி உற்பத்தி மற்றும் தளவாடங்களில் இந்தியாவை உலகத் தலைவராக நிலைநிறுத்துவதற்கான அமைச்சகத்தின் தொலைநோக்குப் பார்வையில், இந்த முயற்சி ஒரு மைல்கல்லாகும்.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், நாட்டின் மின் நிலையங்கள் மற்றும் தொழில்களின் வளர்ந்து வரும் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய, நிலையான மற்றும் நம்பகமான நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்வதற்கும், ஒரு வலுவான நிலக்கரி வெளியேற்ற நெட்வொர்க் முக்கியமானது. இந்த வலைப்பின்னலை விரிவுபடுத்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, முக்கியமான சரக்கு போக்குவரத்து திட்டங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் நீடித்த திட்டத்தை நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த முயற்சி, ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒத்திசைக்கப்பட்ட நேர வரம்பு செயல்படுத்தல் என்ற பிரதமரின் விரைவு சக்தி பார்வையுடன் ஒத்துப்போகிறது, இது வளர்ச்சி அடைந்த இந்தியா 2047-ன் லட்சிய பார்வையை நனவாக்குவதற்கான ஒரு முக்கிய அணுகுமுறையாகும்.

இந்த உத்தியின் ஒரு பகுதியாக, நிலக்கரி அமைச்சகம் நிலக்கரி தளவாடத் திட்டத்தின் கீழ், 38 முன்னுரிமை ரயில் திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது, அவை ரயில்வே அமைச்சகத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் விரைவாகக் கண்காணிக்கப்படும். ரயில் இணைப்பை மேம்படுத்தவும், உரிய நேரத்தில் நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்யவும், சரக்கு போக்குவரத்து செலவுகளைக் குறைக்கவும், அதன் மூலம் நாடு முழுவதும் நிலக்கரி போக்குவரத்தின் ஒட்டுமொத்த திறனை மேம்படுத்தவும் இந்தத் திட்டங்கள் அவசியமானவை.

இந்த முன்னுரிமை திட்டங்களில், ஒடிசாவில் இரண்டு குறிப்பிடத்தக்க ரயில் திட்டங்களுக்கு அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது சர்தேகா-பலுமுடா இரட்டைப் பாதை மற்றும் பர்கர் சாலை-நவாபரா சாலை ஒற்றை பாதை.

37.24 கிலோமீட்டர் நீளமுள்ள சர்டேகா-பாலுமுடா புதிய இரட்டை பாதை, IB பள்ளத்தாக்கு மற்றும் மண்ட்-ராய்கர் நிலக்கரி சுரங்கத்தின் பல்வேறு நிலக்கரி தொகுதிகள் வழியாக செல்கிறது, மகாநதி நிலக்கரி வயல்கள் நிறுவனம் லிமிடெட் (MCL), இயக்கப்படும் சுரங்கங்கள் மற்றும் பல தனியார் சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை வெளியேற்ற உதவும். இந்த திட்டம், குறிப்பாக நீடித்த தன்மை கொண்டது, ஏனெனில், இது சர்டேகாவிலிருந்து வட இந்தியாவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கான போக்குவரத்து தூரத்தை குறைக்கிறது, இதனால் செயல்திறனை அதிகரிக்கிறது.

இதேபோல், 138.32 கி.மீ நீளமுள்ள பர்கர் சாலை-நவாபரா சாலை புதிய ஒற்றை வழித்தடம், தால்ச்சர் நிலக்கரி வயலில் இருந்து நிலக்கரியை வெளியேற்றுவதை கணிசமாக மேம்படுத்தும், இது நாக்பூர் மற்றும் மேற்கு பகுதிகளுக்கு நேரடி மற்றும் தொலைவு குறைந்த பாதையை வழங்கும். இந்தத் திட்டம், தளவாட செலவுகளை கணிசமாகக் குறைப்பதோடு மற்றும் தால்ச்சர் பிராந்தியத்திலிருந்து நிலக்கரி போக்குவரத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலக்கரித்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டியின் தொலைநோக்கு வழிகாட்டுதலின் கீழ், நிலக்கரி அமைச்சகம் இந்த பிற முக்கியமான திட்டங்களை விரைவுபடுத்த உறுதிபூண்டுள்ளது, இந்தியாவின் நிலக்கரித் துறை, தற்போதைய எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், 2047-க்குள் ஒரு நிலையான மற்றும் வளர்ந்த நாட்டிற்கான அடித்தளத்தை அமைப்பதை உறுதி செய்கிறது.

திவாஹர்

Leave a Reply