தேசியக் கல்விக் கொள்கை 2020-ல் திட்டமிடப்பட்டுள்ளபடி சர்வதேச மயமாக்கலின் இலக்குகளை அடைவதை நோக்கி கல்வி அமைச்சகம் முயற்சித்துள்ளது. இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகம் இந்தியாவில் தங்கள் முதல் வளாகத்தை நிறுவ ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்டது. உலகளவில் இப்பல்கலைக்கழகம் முதல் 100 உயர்கல்வி நிறுவனங்களில் தரவரிசையில் உள்ளது. மேலும் இந்தியாவில் நிறுவப்படுவதன் மூலம் இந்தியாவின் கல்வி சூழலை மேம்படுத்தும். மாணவர்களுக்கு உலகளாவிய வெளிப்பாட்டிற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்கும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் இந்திய வளாகங்களை அமைப்பதற்காக பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளின் கீழ், ஒப்புதல் கடிதம் பெறும் முதலாவது வெளிநாட்டு பல்கலைக்கழகம் இதுவாகும்.
“தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் கீழ், கல்வியின் சர்வதேசமயமாக்கல்: இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகம் அமைத்தல்” என்ற தலைப்பில் புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்திற்கு இந்த ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறை செயலாளர் திரு சஞ்சய் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய டாக்டர் எஸ் ஜெய்சங்கர், தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் கீழ், இந்தியாவில் ஒரு வளாகத்தை நிறுவவுள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் கடிதத்தை அளிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நமது கல்வித் தரத்தை உலக அளவில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்துவது மற்றும் இந்தியா-இங்கிலாந்து ஒத்துழைப்பின் கல்வித் தூணாக திகழ்வது ஆகிய இரண்டையும் இது பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். இதுபோன்ற முயற்சிகள் நமது இளைஞர்களை மேலும் பணியாற்ற தயார்படுத்தும் என்றும், உலகளாவிய புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு உணர்வை வளர்க்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த முயற்சி தேசிய கல்விக் கொள்கை 2020-ன் நோக்கத்தின் படி, ‘உள்நாட்டில் சர்வதேச மயமாக்கல்’ என்ற இலக்கை அடைவதற்கான ஒரு முன்னோக்கிய செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் தனது வளாகத்தை திறந்து வைத்ததன் மூலம் இந்தியா-இங்கிலாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்தியதற்காக சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மத்திய கல்வி அமைச்சர் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். உலகின் மற்ற தலைசிறந்த நிறுவனங்களையும் இந்தியாவுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
எம்.பிரபாகரன்