தேசிய மனித உரிமைகள் ஆணையம் மணிப்பூர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவில் மனித உரிமைகள் குறித்த 2 நாள் பயிற்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

மணிப்பூர் பல்கலைக்கழகம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்துடன்  இணைந்து, 30 ஆகஸ்ட் 2024 அன்று ‘இந்தியாவில் மனித உரிமைகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி நிகழ்ச்சியை நிறைவு செய்தது.  மணிப்பூர் பல்கலைக்கழகத்தின் நீதிமன்ற அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பொதுச் செயலாளர் திரு. பாரத் லால் ஆற்றிய நிறைவு உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. திரு. லால் தமது உரையில், முகப்புரை, அடிப்படை உரிமைகள் மற்றும் மாநிலக் கொள்கையின் வழிகாட்டும் கோட்பாடுகள் ஆகியவற்றின் உண்மையான பொருளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நீதியைப் பெறுவதற்கு குடிமக்களுக்கு கிடைக்கக்கூடிய அரசியலமைப்பு மற்றும் சட்ட உதவிகள் குறித்தும், குறிப்பாக நீதியைத் தேடுவதில் பிரிவு 32 குறித்தும் அவர் பேசினார். சிவில், அரசியல், கலாச்சார மற்றும் சமூக-பொருளாதார உரிமைகளை நிலைநிறுத்துவதில் அரசின் பொறுப்பை அவர் வலியுறுத்தினார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திரு. லால், நீதியை அடைவதற்கு வன்முறைக்குப் பதிலாக அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளைச் சார்ந்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

அரசியலமைப்பின் ஆன்மாவான முகப்புரை, சமத்துவம், நீதி, சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய முக்கிய கொள்கைகளை உள்ளடக்கியது என்று திரு பாரத் லால் கூறினார். எந்தவொரு வன்முறையும் அடிப்படையில் மனித உரிமைகளை மீறுவதாகும் என்று வலியுறுத்திய அவர், போர், பயங்கரவாதம் மற்றும் வன்முறை ஆகியவை மனித வாழ்க்கை மற்றும் கண்ணியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும் என்பதை எடுத்துரைத்தார்.  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அமைதி மற்றும் அனைத்து மனிதர்களின் மனித உரிமைகளை மதிக்க தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய திரு. லால், இளைய தலைமுறையினருக்கு வளம் மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை பாதுகாக்க இந்த முயற்சிகள் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply