வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் குறித்த பங்குதாரர்களின் தொடர் ஆலோசனைகளின் ஒரு பகுதியாக, மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, புதுதில்லியில் இன்று வேலைவழங்கும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான அறிமுகக் கூட்டம் ஒன்றுக்கு தலைமை தாங்கினார். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலஜே, செயலாளர் (எல் அண்ட் இ) திருமதி சுமிதா தவ்ரா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முதலாளிகளிடையே உரையாற்றிய டாக்டர் மாண்டவியா, வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத் திட்டம், மேலும் வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்கும் நமது பகிரப்பட்ட இலக்கை நோக்கிய குறிப்பிடத்தக்க படியை பிரதிபலிக்கிறது என்று கூறினார். இது உண்மையிலேயே வெற்றிபெற, அரசு, வணிகங்கள் மற்றும் நமது தொழிலாளர்கள் என அனைத்து பங்குதாரர்களின் கூட்டு முயற்சியும் ஞானமும் தேவை.
“வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது அரசிற்கு முன்னுரிமை அளிக்கிறது, மேலும் வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை (இஎல்ஐ) திட்டம் இந்த இலக்கை அடைவதற்கான சரியான திசையில் ஒரு நடவடிக்கை ஆகும். வலுவான, உள்ளடக்கிய மற்றும் பொருளாதாரத்தின் தேவைகளுடன் இணைந்த ஒரு திட்டத்தை வடிவமைக்க, பங்குதாரர்களுடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், “என்று டாக்டர் மாண்டவியா கூறினார்.
இஎல்ஐ திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமிருந்து ஆலோசனைகளை மத்திய அமைச்சர் வரவேற்றார். அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நமது நாட்டின் இளைஞர்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் நிலையான வேலைகளை வழங்கவும், வணிகங்களை ஊக்குவிக்கும் வகையில் இஎல்ஐ திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
இஎல்ஐ திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் மேலோட்டமாக எடுத்துரைத்த செயலாளர், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை (ELI) திட்டம் தவிர, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பான பிற பிரச்சினைகளும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. உத்தேச இ.எல்.ஐ திட்டம் குறித்தும் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பல்வேறு வேலை வழங்கும் அமைப்புகளின் பிரதிநிதிகள், இந்த திட்டம் மற்றும் அரசாங்கத்தால் எடுக்கப்படும் பிற தொழிலாளர் நல நடவடிக்கைகள் குறித்த தங்கள் கண்ணோட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இதுபோன்ற கூட்டங்கள் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக இருக்கும் என்று வேலை வழங்கும் அமைப்புகளுக்கு மத்திய அமைச்சர் உறுதியளித்தார். நியாயமான, உள்ளடக்கிய தன்மை மற்றும் சமமான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகளும், திட்டங்களும் வகுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, அவர்களின் மதிப்புமிக்க உள்ளீடுகளை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
சிஐஐ, ஃபிக்கி, அசோசெம், பிஎச்டிசிசிஐ, அகில இந்திய வேலை வழங்குவோர் அமைப்பு (ஏஐஓஇ), லகு உத்யோக் பாரதி, இந்திய சிறு தொழில்கள் கவுன்சில் (ஐசிஎஸ்ஐ), இந்திய சிறு தொழில்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (எஃப்ஏஎஸ்ஐஐ), அகில இந்திய தொழில்கள் சங்கம் (ஏஐஏஐ), அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு (ஏஐஎம்ஓ), பொது நிறுவனங்களின் நிலையான மாநாடு (ஸ்கோப்) மற்றும் இந்திய முதலாளிகள் கூட்டமைப்பு (இஎஃப்ஐ) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா