ரஷ்ய தலைமையின் கீழ் இரண்டாவது – இறுதி பிரிக்ஸ் வேலைவாய்ப்பு பணிக்குழுக் (EWG) கூட்டம் ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்றது.
2024 செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள, பிரிக்ஸ் தொழிலாளர் நலன் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் போது ஏற்றுக்கொள்ளப்படவுள்ள தொழிலாளர் – வேலைவாய்ப்பு அமைச்சர்களின் வரைவு திட்டத்துடன், இந்த பணிக்குழுக் கூட்டத்தில் தொழிலாளர் – வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திர குமார் தலைமையிலான இந்திய தூதுக்குழு பங்கேற்றது.
அமைச்சர்கள் பிரகடனத்தை இறுதி செய்வதில் பணிக் குழுக் கூட்டம் கவனம் செலுத்தியது. வேலைவாய்ப்பு பணிக்குழு கூட்டத்தில் முந்தைய கூட்டங்களின் முடிவுகளை செயல்படுத்துவது குறித்த ஆலோசனையுடன் விவாதங்கள் தொடங்கின.
வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான உத்திகள், தொழில் வழிகாட்டல், வேலைவாய்ப்பு சேவைகளை நவீனமயமாக்குதல், பாதுகாப்பான – ஆரோக்கியமான வேலை நிலைமைகளை உறுதி செய்தல், சமூக ஆதரவு முறை ஆகியவை விவாதங்களில் முன்னுரிமை பகுதிகளாக இருந்தன.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைத் தவிர, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, ஈரான் ஆகிய புதிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், சர்வதேச தொழிலாளர் அமைப்பு, சர்வதேச சமூக பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பரிந்துரைகளை வழங்கினர். மாறிவரும் உலக தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
எஸ்.சதிஸ் சர்மா