தூய்மை இந்தியா இயக்கத்தில் உள்துறை அமைச்சகம் தீவிர பங்கேற்பு.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய உள்துறை  அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், உள்துறை அமைச்சகம் தூய்மை இந்தியா இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்க உறுதிபூண்டுள்ளது. தூய்மையை உறுதி செய்யவும், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மக்களின் தொடர்ச்சியான தீவிர பங்கேற்பை உறுதி செய்யவும் உள்துறை அமைச்சகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, எல்லை மேலாண்மை பிரிவின் செயலாளர் திரு ராஜேந்திர குமார், நார்த் பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தூய்மை உறுதிமொழியை ஏற்று வைத்தார்.

அங்கு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. தூய்மை உறுதிமொழி நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது, கழிவுகளை பொறுப்புடன் அகற்றுவதை ஊக்குவித்தல் மற்றும் அன்றாட வாழ்க்கையில் நிலையான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றையும் வலியுறுத்தியது.

இந்த நிகழ்ச்சியில், எல்லை மேலாண்மை செயலாளர், உள்துறை அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகளையும் ஊழியர்களையும் தங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் தூய்மை இந்தியா இயக்கத்திற்கு தொடர்ந்து பங்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். தூய்மையான, பசுமை இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற உள்துறை அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது என்றும், தூய்மை, நீடித்த தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பொறுப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் முன்முயற்சிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபடும் என்றும் அவர் கூறினார்.

தூய்மை இந்தியா இயக்கத்தில் தங்களின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், உள்துறை அமைச்சகத்தின் ஏராளமான அதிகாரிகளும், ஊழியர்களும் தூய்மைப் பணிகளில் பங்கேற்று, அலுவலக வளாகத்தில் உள்ள பொது இடங்கள் குப்பைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்தனர். சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பதில் ஒவ்வொரு தனிநபரின் பொறுப்பையும் காட்டும் முயற்சியாக இந்த தூய்மை இயக்கம் செயல்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையான எதிர்காலத்திற்கான தங்கள் அர்ப்பணிப்பைக் காட்டும் வகையில், உள்துறை அமைச்சகத்தின் ஏராளமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ‘தாயின் பெயரில் ஒரு மரக்கன்று’ நடும் இயக்கத்தின் கீழ் நார்த் பிளாக்கில் அமைந்துள்ள பூங்காவில் மரக்கன்றுகளை நட்டனர்.

Leave a Reply