இந்திய கடற்பகுதியை கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத தளமாக மாற்றுவது குறித்த உயர்மட்ட மாநாடு.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், ஆசிய வளர்ச்சி வங்கி இணைந்து நடத்திய, இந்திய கடற்பகுதியை கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத தளமாக மாற்றுவது குறித்த மாநாடு புதுதில்லியில் இன்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஒன்றிணைத்து பசுமை கப்பல் மற்றும் துறைமுக நடவடிக்கைகளின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது.

2070-க்குள் நிகர பூஜ்ஜிய கரியமிலவாயு வெளியேற்ற தளத்தை உருவாக்குதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டியதுடன், கடல்சார் இந்தியா விஷன் (தொலைநோக்குப் பார்வை) 2030 உடன் இணைந்த அதன் கடல்சார் துறையை கரியமிலவாயு வெளியேற்றம் இல்லாமல் செய்வதற்கான உத்திகள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள்  அமைச்சகத்தின் செயலாளர் திரு டி.கே. ராமச்சந்திரன் தமது முக்கிய உரையில், கடல்சார் துறையை மாற்றியமைப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். இன்றைய நமது முயற்சிகள் நாளைய கடல்சார் நிலப்பரப்பை வரையறுக்கும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு இடையிலான சமநிலையை உறுதி செய்யும் என்றார்.

“குறைந்த அல்லது பூஜ்ஜிய கரியமிலாவாயு உமிழ்வு எரிபொருட்களைத் தழுவி, 2047 -க்குள் இந்திய நீரில் உள்ள அனைத்து கப்பல்களையும் பசுமைக் கப்பல்களாக மாற்றுவதற்கான அமைச்சகத்தின் லட்சியம், பருவநிலை நடவடிக்கை மற்றும் நிலையான கடல்சார் நடைமுறைகளுக்கான முன்னோக்கு சிந்தனை அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாகும்.

இந்த நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்று, பசுமை துறைமுகங்கள் மற்றும் கடற்பகுதிகளில் கரியமிலவாயு வெளியேற்றம் இல்லாதது குறித்த சிறப்பு அமர்வாகும். இதில் வல்லுநர்கள் இந்திய துறைமுகங்களின் கரியமிலவாயு தடத்தை குறைப்பதற்கான யோசனைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

மற்றொரு அமர்வில், கடல்சார் நடவடிக்கைகளில் பூஜ்ஜிய கரியமிலவாயு வெளியேற்றத்தின் பங்கு குறித்து விவாதங்களில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த மாநாடு, உள்நாட்டு நீர்வழிகளை கரியமிலவாயு வெளியேற்றத்தைப் குறைப்பதற்கான ஒரு முக்கிய பகுதியாக எடுத்துக்காட்டியது.

இந்தியா தனது லட்சிய இலக்குகளுடன் முன்னேறும்போது, கடற்பகுதிகளில் கரியமிலவாயு வெளியேற்றம் இல்லாமை குறித்த மாநாட்டிலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவுகள், தூய்மையான, பசுமையான கடல்சார் துறைக்கு பங்களிக்கும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

Leave a Reply