மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இன்று நாக்பூரில் உள்ள வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (டபிள்யூசிஎல்) தலைமையகத்திற்கு வருகை தந்து நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அவருடன் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரியும் சென்றார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ரூபிந்தர் பிரார், கோல் இந்தியா லிமிடெட் தலைவர் திரு பி.எம். பிரசாத், உள்ளூர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது, டபிள்யூசிஎல் நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தித்திறன், அனுப்பும் திறன், திட்டம் தொடர்பான மக்களின் பிரச்சனைகள் போன்றவை குறித்து திரு ஜி.கிஷன் ரெட்டி ஆய்வு செய்தார். நடப்பு நிதியாண்டின் முதல், இரண்டாவது காலாண்டுகளுக்கான நிலக்கரி உற்பத்தி, அனுப்புதல் ஆகியவற்றின் முக்கிய அளவீடுகளை உள்ளடக்கிய விரிவான விளக்கம் அமைச்சருக்கு வழங்கப்பட்டது. மேலும், டபிள்யூசிஎல் தனது வருடாந்திர உற்பத்தி இலக்குகளை நிதியாண்டின் இறுதிக்குள் எட்டும் என்று உறுதியளிக்கப்பட்டது.

திரு கிஷன் ரெட்டி தமது உரையில், கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் அனைத்தும் நாட்டின் நிலக்கரி தேவையை பூர்த்தி செய்ய தங்களது வருடாந்திர இலக்குகளை அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தற்போதுள்ள சுரங்க நடவடிக்கைகளை அதிகரிப்பதும் புதிய திட்டங்களைத் தொடங்குவதும், நிலக்கரித் துறையில் இந்தியாவை தற்சார்புடையதாக மாற்றுவதும் இன்றியமையாதவை என்று அமைச்சர் கூறினார். மேலும், நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல், வன அனுமதிகள், நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நிலக்கரி அமைச்சகம் முழு ஆதரவையும்  வழங்கம் என்று அவர் உறுதியளித்தார்.

ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, தூய்மையே சேவை இயக்கத்தில் சிறப்பான பங்களிப்புக்காக திரு ஜி கிஷன் ரெட்டி தூய்மைப் பணியாளர்களை கௌரவித்தார். ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடுதல் முன்முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஒரு மரக்கன்றை நட்டார். நிலக்கரி மற்றும் எரிசக்தி ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Leave a Reply