லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் செயலாளரும், லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசின் அதிபருமான திரு தோங்லூன் சிசோலித்தை பிரதமர் திரு நரேந்திர மோடி, வியன்டியானில் இன்று சந்தித்தார். ஆசியான் உச்சிமாநாட்டையும் கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியதற்காக அதிபர் திரு சிசோலித்தைப் பிரதமர் பாராட்டினார்.
இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததுடன், நெருங்கிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்தியா-லாவோஸ் இடையேயான சமகால நட்புறவு, பழமையான நாகரீக பிணைப்பில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டனர். வளர்ச்சிக் கூட்டாண்மை, பாரம்பரிய மீட்பு, கலாச்சார பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர். இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் பத்தாண்டுகளை 2024-ம் ஆண்டு குறிக்கிறது என்று குறிப்பிட்ட பிரதமர், லாவோஸ் உடனான இந்தியாவின் ஈடுபாட்டிற்கு மேலும் உத்வேகம் அளிப்பதில் இது முக்கியமானதாக உள்ளது என்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான நாகரீக உறவுகள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், புதிய நாளந்தா பல்கலைக்கழகம் அளிக்கும் வாய்ப்புகள் மூலம் மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். யாகி புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசுக்கு இந்தியா அளித்த மனிதாபிமான உதவிக்காக பிரதமருக்கு அதிபர் திரு சிசோலித் நன்றி தெரிவித்தார்.
இந்தியா-ஆசியான் உறவுகளை வலுப்படுத்த லாவோஸ் அளித்து வரும் ஆதரவுக்காக அதிபர் சிசோலித்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். இரு தலைவர்களும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர்.
திவாஹர்