ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், துப்பாக்கி சூடு நடத்திய வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை 22-ந் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு ஆந்திர அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் கட்டளையிட்டு இருக்கிறது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில், கடந்த 7-ந் தேதி செம்மரங்களை வெட்ட வந்ததாக கூறி, 20 தமிழர்களை, ஆந்திர மாநில போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இது திட்டமிட்ட படுகொலை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நேரில் பார்த்த சாட்சியாக கண்ணமங்கலத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் கருதப்படுகிறார்.
திருத்தணியில் இருந்து திருப்பதிக்கு தான் பஸ்சில் சென்றபோது, ஆந்திர போலீசார் அந்த பஸ்சில் சோதனை நடத்தி 7 பேரை பிடித்துச் சென்றதாகவும், பெண்கள் இருக்கையில் அமர்ந்து இருந்ததால் தான் தப்பியதாகவும், அவர் கூறினார்.
இதேபோல் பாலசந்திரன் என்பவரும், இந்த சம்பவத்தில் முக்கிய சாட்சியாக விளங்குகிறார். இதனால் முக்கிய சாட்சிகளான இவர்கள் இருவரையும் மனித உரிமை ஆர்வலர்கள் தங்கள் பாதுகாப்பில் வைத்து உள்ளனர்.
இந்த நிலையில் சேகரும், உயிர் தப்பிய மற்றொரு தொழிலாளியான பாலசந்திரனும் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரும், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியுமான பாலகிருஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இருவரும், 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தங்களுக்கு தெரிந்த விவரங்களை சாட்சியமாக அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
துப்பாக்கி சூடு சம்பவத்தின் நேரடி சாட்சியங்களான சேகரும், பாலச்சந்திரனும் தங்கள் உயிருக்கும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று அச்சம் தெரிவித்ததால், அவர்கள் அனைவருக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் தீர்மானித்து உள்ளது.
எனவே, சேகர், பாலச்சந்திரன் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு தமிழ்நாடு போலீஸ் டைரக்டர் ஜெனரலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்த இருவரும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு அளித்த சாட்சியத்தில், தாங்கள் வசிக்கும் கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்கள் அளித்த ஆதரவின் அடிப்படையில் தாங்கள் இந்த சாட்சியங்களை அளித்துள்ளதாக தெரிவித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளின் தலைவர்களுக்கும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறையின் டைரக்டர் ஜெனரலுக்கு கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
1.இந்த சம்பவம் குறித்து குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 176(1) (ஏ)-ன் கீழ் முதல் வகுப்பு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டை கொண்டு உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
2.துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த வனத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் செம்மர கடத்தல் தடுப்பு சிறப்பு படை போலீசார் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வருகிற 22-ந் தேதிக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.
3.தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி பிரேத பரிசோதனைகள் நடத்த வேண்டும்.
4.இந்த சம்பவத்தின் போது செம்மர கடத்தல் தடுப்பு சிறப்பு படையினர் மற்றும் கொல்லப்பட்டவர்கள் பயன்படுத்திய அனைத்து ஆயுதங்களையும் பத்திரமாக பாதுகாப்பில் வைக்க வேண்டும்.
5.தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை முடிவடையும் வரை போலீஸ் பதிவேடு, வழக்கு புத்தகங்கள், ஜெனரல் டைரி குறிப்புகள் மற்றும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் எக்காரணம் கொண்டும் அழிக்கவோ, திருத்தவோ அல்லது சேதாரப்படுத்தவோ கூடாது.
மேலும் ஒரு சாட்சி ஒரு சில காரணங்களால் டெல்லி வர முடியவில்லை என்று சேகரும், பாலச்சந்திரனும் தெரிவித்தனர். எனவே, அந்த மற்றொரு சாட்சியின் சாட்சியத்தையும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனியாக ஒரு அதிகாரியை நியமித்து பதிவு செய்ய தீர்மானித்து உள்ளது.
இவ்வாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in