திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து, அண்ணாசிலை, படித்துறை, ஓயாமரி, பனையக்குறிச்சி மற்றும் சர்க்கார்பாளையம் வழியாக அரியமங்கலம் கிராமத்திற்கு செல்லும் மினி பஸ், இன்று மாலை 4.45 மணியளவில் சஞ்சீவி நகர் அருகே, சென்னை பைபாஸ் ஒரு வழி சாலையில் வேகமாக திரும்பிய போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மினி பஸ் சாலையில் தலைகுப்பற கவிழ்ந்தது.
இதில் மினி பஸ்சில் பயணம் செய்த பலபேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர்கள், திருச்சிராப்பள்ளி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஒருவர் உயிரிழந்து உள்ளார். இறப்பின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று தெரிகிறது.
இன்று தமிழ் வருடப் பிறப்பு மற்றும் சமயபுரம் தேரோட்டம் என்பதால், மினி பஸ்சில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் படிக்கட்டில் பயணம் செய்த பல இளைஞர்கள் இந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்னர்.
மேலும், கல்லணைச் செல்லும் சாலைக்கு செல்வதற்கு சுரங்கப்பாதை இல்லாததால், சென்னை பைபாஸ் சாலையில் சஞ்சீவி நகர் அருகே அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு, கல்லணை செல்ல பைபாஸ் சாலையில் சுரங்கப்பாதை அமைப்பதுதான்.
விபத்துக்கு உள்ளான இந்த மினி பஸ், முறையாக கொண்டையம்பேட்டை வரை சென்றுதான் சர்க்கார்பாளையம் வழியாக அரியமங்கலம் கிராமத்திற்கு செல்ல வேண்டும்.
ஆனால், எரிபொருள் மற்றும் காலவிரையத்தைக் கருத்தில் கொண்டு, ஒரு வழி சாலையில் தொடர்ந்து சென்றதின் விழைவுதான், இந்த விபத்திற்கு முக்கிய காரணம். இதைப் போக்குவரத்து துறை அதிகாரிகளும், போக்குவரத்து காவல்துறையும் கண்டுகொள்வதே கிடையாது.
சஞ்சீவி நகரில் கூப்பிடும் தூரத்தில்தான் திருச்சி (கிழக்கு) மண்டல போக்குவரத்து (RTO) அலுவலகம் உள்ளது. போக்குவரத்து அலுவலக ஜன்னலை திறந்து கிழக்கு பக்கமாகப் பார்வையிட்டாலே, சர்வீஸ் சாலையில் எத்தனை லாரிகள் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டு இருக்கின்றன என்பதை கண்கூடாக பார்க்க முடியும். ஆனால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு காரணம் என்ன?
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in