தன்வந்தரி ஜெயந்தி, 9-வது ஆயுர்வேத தினம் ஆகியவற்றை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (29.10.2024) புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் (AIIA) சுமார் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதாரத் துறை தொடர்பான பல திட்டங்களை தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தன்வந்தரி ஜெயந்தியையும் தந்தேராஸ் பண்டிகையையும் குறிப்பிட்டுத், தமது நல்வாழ்த்துகளை மக்களுக்கு தெரிவித்தார். பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளுக்கு புதிய பொருட்களை வாங்க முனைவதால் நாட்டில் உள்ள அனைத்து வணிகர்களுக்கும் வியாபாரம் அதிகரிக்கும் என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இந்த தீபாவளி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். ஏனெனில் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில் ஆயிரக்கணக்கான தியாகங்களால் ஒளிர்வதாகவும் இது தொடர்பான கொண்டாட்டங்கள் முன்னெப்போதும் இல்லாததாக இப்போது இருக்கும் என்றும் கூறினார். இந்த ஆண்டு தீபாவளியில் ராமர் மீண்டும் தனது இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளார் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த காத்திருப்பு இறுதியாக 500 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது என்று கூறினார்.
இந்த ஆண்டு தந்தேராஸ் பண்டிகை வளம், ஆரோக்கியம் ஆகியவற்றின் கலவையாக இருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல என்றும் இந்தியாவின் கலாச்சார வாழ்க்கை தத்துவத்தின் அடையாளமாகும் என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். துறவிகளை மேற்கோள் காட்டிய பிரதமர், ஆரோக்கியம் என்பது உயர்ந்த செல்வமாகக் கருதப்படுகிறது என்றும், இந்தப் பழங்காலக் கருத்து யோகா வடிவில் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார். இன்று 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆயுர்வேத தினம் கொண்டாடப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு நரேந்திர மோடி, ஆயுர்வேதத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்து வருவதற்கும், பழங்காலம்தொட்டு உலகிற்கு இந்தியா அளித்து வரும் பங்களிப்புக்கும் இது சான்று என்று கூறினார்.
கடந்த பத்து ஆண்டுகளில், நவீன மருத்துவத்துடன் ஆயுர்வேத அறிவை ஒருங்கிணைத்ததன் மூலம் சுகாதாரத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தை நாடு கண்டுள்ளது என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த அத்தியாயத்தின் மையமாக அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் திகழ்வதாகவும் அவர் கூறினார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஆயுர்வேத தினத்தன்று இந்த நிறுவனத்தின் முதல் கட்ட செயல்பாட்டை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் அதிர்ஷ்டம் தமக்கு கிடைத்தது என்றும், இன்று தன்வந்திரி பகவானின் ஆசீர்வாதத்துடன் இந்த நிறுவனத்தின் இரண்டாம் கட்ட செயல்பாட்டைத் தாம் தொடங்கி வைப்பதாகவும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஆயுர்வேத மருத்துவ அறிவியல் துறையில் மேம்பட்ட ஆராய்ச்சி ஆய்வுகளுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பஞ்சகர்மா போன்ற பண்டைய நுட்பங்களை இந்த நிறுவனத்தில் காண முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த முன்னேற்றத்திற்காக மக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
திவாஹர்