தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1261 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் திட்டமான ‘நமோ ட்ரோன் சகோதரி’க்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2024-25 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14500 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விவசாய நோக்கத்திற்காக (தற்போதைக்கு திரவ உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துதல்) விவசாயிகளுக்கு வாடகை அடிப்படையில் சேவைகள் வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை இந்தத் திட்டத்திற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
‘நமோ ட்ரோன் சகோதரி’ திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக இந்த செயல்பாட்டு வழிகாட்டுதல்களை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்துமாறு அனைத்து பங்குதாரர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். செயல்பாட்டு வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள்:
இத்திட்டம் மத்திய அளவில் வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, உரத் துறை, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் செயலாளர்களைக்கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவால் நிர்வகிக்கப்படும்.
ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் செயலாளரைத் தலைவராகக் கொண்டு, அனைத்து பங்களிப்பாளர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட செயலாக்கம் மற்றும் கண்காணிப்புக் குழு, இத்திட்டத்தை திறம்பட திட்டமிடுதல், செயல்படுத்துதல், கண்காணித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதுடன், இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அனைத்து தொழில் நுட்ப இனங்களில் ஒட்டுமொத்த ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் வழங்கும்.
இத்திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்களை ஒரு தொகுப்பாக வாங்குவதற்கு ட்ரோன்/ துணைக்கருவிகள் / துணை கட்டணங்களின் செலவில் 80% , அதிகபட்சம் ரூ. 8 லட்சம் வரை மத்திய நிதி உதவி வழங்கப்படும்.
சுய உதவிக் குழுக்கள் / சுய உதவிக் குழுக்களின் தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள் மீதமுள்ள தொகையை (மொத்த கொள்முதல் செலவு மானியத்தை கழித்து) தேசிய வேளாண் உள்கட்டமைப்பு நிதி வசதியின் கீழ் கடனாகப் பெறலாம். இதற்கு 3% வட்டி மானியம் வழங்கப்படும்.
மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் பிற ஆதாரங்கள்/திட்டங்களில் இருந்து கடனுதவி பெறவும் தனிநபர் கூட்டமைப்புகள்/சுய உதவிக் குழுக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், ட்ரோன்கள் மட்டுமின்றி திரவ உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பான், ட்ரோன் கொண்டுசெல்லும் பெட்டி, தரமான மின்கலம், கீழ்நோக்கிய கேமரா, இருமுனை கொண்ட விரைவான மின்கல மின்னேற்றி , மின்னேற்றிக் கருவி, அனிமோமீட்டர், பிஎச் மீட்டர் மற்றும் அனைத்து பொருட்களுக்கும் ஓராண்டு உத்தரவாதம் ஆகியவை இருக்கும்.
கட்டாய ட்ரோன் ஓட்டும் பயிற்சி, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு ஆகிய வேளாண் நோக்கங்களுக்கான கூடுதல் பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய 15 நாள் பயிற்சிக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்படுவார். சுய உதவிக் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர் / குடும்ப உறுப்பினர்களுக்கு மின் சாதனங்கள், பொருத்துதல் மற்றும் இயந்திர வேலைகள், பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ள ட்ரோன் உதவியாளராக பயிற்சி அளிக்கப்படும். செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சி அட்டவணையின்படி ட்ரோன்களின் விநியோகத்துடன் ட்ரோன் உற்பத்தியாளர்கள் இந்த பயிற்சிகளை ஒரு தொகுப்பாக வழங்குவார்கள்.
மாநிலங்களுக்குப் பொறுப்பான முன்னணி உர நிறுவனங்கள் மாநில அளவில் இத்திட்டத்தை செயல்படுத்தும் முகவர்களாக இருக்கும். மேலும், அவை மாநிலத் துறைகள், ட்ரோன் உற்பத்தியாளர்கள், சுய உதவிக் குழுக்கள் / சுய உதவிக் குழுக்களின் தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் விவசாயிகள் / பயனாளிகள் ஆகியோருடன் தேவையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும். நியாயமான மற்றும் வெளிப்படையான செயல்முறை மூலம் ட்ரோன்கள் வாங்கப்படும், மேலும் ட்ரோன்களின் உரிமை சுய உதவிக் குழுக்கள் அல்லது சுய உதவிக் குழுக்களின் தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள் வசம் ஒப்படைக்கப்படும்.
திவாஹர்