பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை நனவாக்க இந்திய இளைஞர்கள் உள்நாட்டிலேயே உயர்தர தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று 2024 நவம்பர் 02) கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி) 65-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.
தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில் ‘தொழில்நுட்பம்’ மிகப்பெரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். உயர்தர தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இளைஞர்கள் தங்கள் திறனை உணர்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்று கூறினார். கான்பூர் ஐஐடி கான்பூர் போன்ற கல்வி நிறுவனங்கள் இதில் முக்கிய பங்காற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.
போர் சூழலில் தொழில்நுட்பத்தின் அதிகரித்து வரும் பங்கை எடுத்துரைத்த பாதுகாப்பு அமைச்சர், ட்ரோன்கள், லேசர் போர், சைபர் போர், துல்லியமாக செலுத்தப்படும் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஆகியவற்றின் பயன்பாடு, போரை தொழில்நுட்பம் சார்ந்த ஒன்றாக மாற்றியுள்ளது என்று கூறினார். போரின் மாறிவரும் தன்மையைக் கருத்தில் கொண்டு நவீன அதிநவீன தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு பயன்பாட்டில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறையில் இந்தியாவை தற்சார்புடையதாக மாற்ற தனியார் துறையினர், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்க அரசு உறுதிபூண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். இளைஞர்களின் வலிமையால் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று இந்தியா கனவு கண்டுள்ளது என்றும் அந்தக் கனவை நனவாக்க நாம் நமது முழு சக்தியையும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
திவாஹர்