மக்கள் பங்களிப்புடன் நாடாளுமன்ற அவை மற்றும் நிலைக்குழுவில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன: மக்களவை தலைவர்.

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் நாடாளுமன்றம் மற்றும் நிலைக்குழுவில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டதாக மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று தெரிவித்தார். இந்த சட்டங்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற கல்வி நிறுவனம் நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், 83 நாடுகளைச் சேர்ந்த 135 தூதர்கள் / அதிகாரிகளிடையே உரையாற்றிய திரு பிர்லா, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், சமகால சமூகத்தின் சவால்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உள்ளன என்று குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று திரு பிர்லா குறிப்பிட்டார். இந்தியச் சட்டம் கடைசி நபருக்கும், நீதிக்கான உரிமையை வழங்குகிறது என்றும், பொது மக்கள் நீதிபதியை கடவுளாகப் பார்க்கிறார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.  கடந்த 75 ஆண்டுகளில் நீதியின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை  அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். தற்போதைய உலகளாவிய சூழலில், பல்வேறு நாடுகளின் சட்ட கட்டமைப்பு மற்றும் மதிப்புகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்றும் இது நாடுகளிடையே ராஜிய செயல்திறன் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை அதிகரிக்கிறது  என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் சட்ட அமைப்பு, நாடாளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவின் ஜனநாயக அமைப்பு ஆகியவற்றை தூதர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று திரு பிர்லா பரிந்துரைத்தார்.

Leave a Reply