புதுதில்லியில் இன்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் ‘பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு -2024’ தொடக்க அமர்வில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் என்ஐஏவின் குறிக்கோளை மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட்டார். யுஏபிஏ விசாரணைகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்ட அவர், என்ஐஏ-வைச் சேர்ந்த பதக்கம் வென்ற 11 வீரர்களை கௌரவித்தார். மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், புலனாய்வு அமைப்பின் (ஐபி) இயக்குநர் திரு தபன் குமார் டேகா, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு பங்கஜ் சிங், என்ஐஏ தலைமை இயக்குநர் திரு சதானந்த் வசந்த் தத்தே உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான பிரச்சினைகளைக் கையாளும் மத்திய முகமைகள் / துறைகளின் அதிகாரிகள் மற்றும் சட்டம், தடயவியல், தொழில்நுட்பம் போன்ற தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர், என்ஐஏ ஒரு விசாரணை அமைப்பு மட்டுமல்ல, அதன் ஆதரவின் கீழ், நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொகுக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும், விசாரணை அமைப்பு நீதிமன்றத்தில் உறுதியாக நிற்கவும், பயங்கரவாத எதிர்ப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
பதக்கம் வென்ற 11 பேருக்கும் இன்று விருது வழங்கப்பட்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து 75 ஆண்டுகளில், நாட்டின் பாதுகாப்பை பராமரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்புக்காக 36,468 காவல்துறையினர் உயிர் தியாகம் செய்துள்ளதாக அவர் கூறினார்.
2014-ல் திரு. நரேந்திர மோடி பிரதமரானதிலிருந்து 10 ஆண்டுகளில், மத்திய அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான உத்தியுடன் முன்னேறி வருகிறது என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடியின் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ என்ற முழக்கம் இந்தியா மட்டுமல்ல, முழு உலகாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட இந்தியாவில் ஒரு வலுவான ‘சுற்றுச்சூழல் அமைப்பு’ கட்டமைக்கப்பட்டுள்ளது. இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்றாலும், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மேலோட்டமாகப் பார்த்தால், அது திருப்திகரமாக இருக்கும் என்று திரு ஷா மேலும் கூறினார். பயங்கரவாதம், பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை மற்றும் மூலோபாயத்தை உள்துறை அமைச்சகம் விரைவில் அறிமுகப்படுத்தும் என்றும் உள்துறை அமைச்சர் அறிவித்தார்.
பயங்கரவாதத்தின் ஒட்டுமொத்த ‘சுற்றுச்சூழல் அமைப்பை’ எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய பயங்கரவாத எதிர்ப்பு கொள்கை மற்றும் உத்தியை உள்துறை அமைச்சகம் விரைவில் உருவாக்கும் என்று அவர் கூறினார்.
தீவிரவாதத்திற்கு எதிராக வலுவான சூழலை உருவாக்கவும், அதை ஒழிக்கவும் மோடி அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்ணுக்குத் தெரியாத மற்றும் எல்லையற்ற பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, மோடி அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு தொழில்நுட்பங்களை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவுவதாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
யுஏபிஏ வழக்குகளில் சுமார் 95% தண்டனை விகிதத்தை அடைவதில் என்ஐஏ வெற்றி பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மோடி அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, கடந்த பத்தாண்டுகளில் பயங்கரவாத சம்பவங்கள் 70% குறைந்துள்ளதாகவும் திரு அமித் ஷா தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்