வட மாநிலங்களில் செயல்படுத்தப்படும் வேளாண் திட்டங்கள் குறித்த இடைக்கால ஆய்வு நடத்துவதற்காக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் மண்டல மாநாட்டை நடத்தியது. பஞ்சாப், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் தில்லி யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள், பணியின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்ததுடன், இந்தத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்து விவாதித்தனர்.
கூட்டத்தில் பேசிய, செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி, சரியான நேரத்தில் நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்வதன் மூலமும், மாநில பங்களிப்புகள் மற்றும் ஒற்றை நோடல் கணக்கு (எஸ்என்ஏ) நிலுவைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலமும், மத்திய நிதியுதவி திட்டங்களை (சிஎஸ்எஸ்) செயல்படுத்துவதை விரைவுபடுத்துமாறு மாநிலங்களை வலியுறுத்தினார். SNA-SPARSH ஐ செயல்படுத்துவதன் முக்கியத்துவம், பயன்படுத்தப்படாத நிலுவைத் தொகை மற்றும் வட்டியைத் திருப்பித் தருவதுடன், பயன்பாட்டுச் சான்றிதழ்களை (UCs) உடனடியாக சமர்ப்பித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் (ஆர்.கே.வி.ஒய்) மற்றும் கிரிஷன்னதி திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களின் அமலாக்கத்தை மேம்படுத்துவதில் இந்த மாநாடு கவனம் செலுத்தியது, இதில் செயல்படாத மாநிலங்கள், நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களில் தங்கள் முயற்சிகளை மேம்படுத்த ஊக்குவிக்கப்பட்டன. நிதி பயன்பாட்டில் முந்தைய தாமதங்களைக் குறைக்கும் நோக்கில், ஏப்ரல் மாதத்திற்குள் முதல் தவணையை சரியான நேரத்தில் வெளியிடுவதற்கு ஏதுவாக 2025-26 நிதியாண்டிற்கான தேசிய வேளாண் அபிவிருத்தி திட்ட வருடாந்திர செயல் திட்டத்தை டிசம்பர் மாதத்திற்குள் இறுதி செய்ய வேண்டும் என்றும் டாக்டர் சதுர்வேதி மாநிலங்களுக்கு அறிவுறுத்தினார்.
கடன் அணுகலை மேம்படுத்துவதற்கான கிசான் கிரெடிட் கார்டு (KCC) இயக்கம், இடர் தணிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பயிர் காப்பீட்டிற்கான பிரதமரின் பயிர் காப்பீட்டுத்திட்டம் (PMFBY) மற்றும் தரவு சார்ந்த விவசாயத்தை மேம்படுத்துவதற்கான டிஜிட்டல் விவசாய இயக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய முக்கிய முயற்சிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
எம்.பிரபாகரன்