குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (நவம்பர் 8, 2024) ஊழல் விழிப்புணர்வு வாரம் 2024-ல் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நமது சமுதாயத்தில் நேர்மையும், ஒழுக்கமும் வாழ்க்கையின் இலட்சியங்களாகக் கருதப்படுகின்றன என்றார். இந்திய மக்கள் ஒழுக்கமின்மையை விரும்புவதில்லை என்பதோடு சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, மெகஸ்தனிஸ் எழுதினார். அவர்கள் வாழ்வில் எளிமையும் சிக்கனமும் இருக்கும். நமது முன்னோர்களைப் பற்றி ஃபா-ஹியான் என்பவரும் இதே போன்ற குறிப்புகளைக் கூறியுள்ளார். இந்த வகையில், இந்த ஆண்டு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கருப்பொருள் தேசத்தின் சுபீட்சத்திற்காக ஒருமைப்பாட்டின் கலாச்சாரம் என்பது மிகவும் பொருத்தமானது.
நம்பிக்கை என்பது, சமூக வாழ்வின் அடித்தளம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அதுவே ஒற்றுமையின் ஊற்றுக்கண். அரசின் பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையே ஆட்சிக்கான சக்தியின் ஆதாரமாகும். ஊழல் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருப்பது மட்டுமல்லாமல், அது சமூகத்தின் மீதான நம்பிக்கையையும் குறைக்கிறது. இது மக்களிடையே சகோதரத்துவ உணர்வுகளை மோசமாக பாதிக்கிறது. இது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது பரவலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31-ம் தேதியன்று சர்தார் படேலின் பிறந்த நாளன்று நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் அப்படியே காக்க நாம் உறுதி ஏற்போம். இது வெறும் சடங்கு அல்ல. இது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய உறுதிமொழி. அதை நிறைவேற்ற வேண்டிய கூட்டுப் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
அறநெறி என்பது இந்திய சமுதாயத்தின் லட்சியம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். பொருட்கள், பணம் அல்லது சொத்துகளைச் சேர்ப்பதே நல்வாழ்வின் தரம் என்று சிலர் கருதத் தொடங்கும் போது, அவர்கள் அந்த லட்சியத்திலிருந்து விலகி, ஊழல் நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு சுயமரியாதையுடன் வாழ்வதில் தான் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.
எந்தவொரு பணியும் சரியான உணர்வுடனும் உறுதியுடனும் செய்யப்பட்டால், வெற்றி நிச்சயம் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். சிலர் அசுத்தத்தை நமது நாட்டின் தலைவிதி என்று கருதினர். ஆனால் வலுவான தலைமை, அரசியல் உறுதி, குடிமக்களின் பங்களிப்பு ஆகியவை தூய்மைத் துறையில் நல்ல பலன்களை அளித்துள்ளன. அதேபோல், ஊழலை ஒழிப்பது சாத்தியமில்லை என்று சிலர் கருதுவது சரியல்ல. ஊழலுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்ற மத்திய அரசின் கொள்கை ஊழலை வேரோடு ஒழிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஊழல்வாதிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானதாகும் என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். செயலில் தாமதம் அல்லது பலவீனமான செயல், நெறிமுறையற்ற நபர்களை ஊக்குவிக்கிறது. ஆனால், ஒவ்வொரு செயலையும், நபரையும் சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது என்பதும் அவசியம். இதை நாம் தவிர்க்க வேண்டும். ஒருவரின் கண்ணியத்தை மனதில் கொண்டு, எந்த செயலும் தீய எண்ணத்தால் தூண்டப்படக்கூடாது. எந்தவொரு செயலின் நோக்கமும் சமூகத்தில் நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்.
திவாஹர்