தமிழக அரசு, விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப பயிர் காப்பீடு செய்வதற்கு கால
அவகாசத்தை நீட்டிக்க உடனடி நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும்.
விவசாயிகள் பயிர் செய்யும் நெற்பயிர்களுக்கு உட்பட பல பயிர்களுக்கு பயிர் காப்பீடானது
மிகவும் பயனுள்ளது.
விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர் காரணமாக, எதிர்பாராமல் ஏற்படும் சேதங்களுக்கு
உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், புதிய
தொழில்நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் மத்திய அரசின் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறுகின்றனர்.
நடப்பு ஆண்டில் சம்பா பருவத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் நாளை 15.11.2024
வரை பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
சாகுபடி செய்யும் காரீப், சம்பா மற்றும் ரபி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.
பயிர் காப்பீடு செய்ய ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் தொடர் மழை,
விடுமுறை, விழிப்புணர்வு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளால் பயிர் காப்பீடு
செய்ய முடியாத சூழல் உள்ளது.
அதாவது மாநிலம் முழுவதும் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் உள்ள
விவசாயிகள் இன்னும் பயிர் காப்பீடு செய்யவில்லை.
இந்நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கு கால அவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
தற்போது விவசாயிகள் பொருளாதாரம், கடன் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு
மத்தியில் விவசாயம் செய்வதால் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டிப்பது தான்
விவசாயிகளுக்கு உதவிக்கரமானது.
எனவே மத்திய மாநில அரசுகள் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கால அவகாசத்தை
நீட்டிக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில்
கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன்
தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா