தமிழகத்தில் முதன் முறையாக பேருந்துகளில் பஸ் மார்ஷல்கள் நியமித்தல் மற்றும் கண்காணிப்பு கேமிரா பொருத்தும் திட்டம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்.எம்.ரவி குமார் தொடங்கி வைத்தார்!

21.4.2015 - DCP1 DCP2

பேருந்துகளில் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு, பஸ் மார்ஷல்களை நியமித்தல் மற்றும் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி குற்றங்களை தடுப்பது என்பது தமிழக காவல்துறையில் ஒரு முன்னோடி திட்டமாகும்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களிடையே அவ்வப்போது எழுகின்ற சிறுசிறு பிரச்சனைகளினால் தேவையில்லாத விரோதங்கள் மற்றும் காழ்ப்புணர்ச்சி உண்டாகி அதனால் மிகப் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகின்றது.

இதற்கு காவல்துறையினரால் சட்டப்படியான தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படப்பட்டு வருகிறது. எனினும், மக்களை பகையுணர்வு இல்லாமல் நல்வழிப்படுத்தும் விதமாக, பேரூர், ஸ்ரீமூலக்கரை, பத்மநாபமங்களம், பொன்னாங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் சென்று கிராம விழிப்புணர்வு குழு கூட்டங்கள் நடத்தி அவர்களுடன் கலந்துரையாடல் செய்ததில், கிராமங்களில் நடைபெற்ற மோதல்களுக்கு காரணமான நபர்கள் மீதும், தொடர்ந்து பிரச்சனை நிகழாவண்ணம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதும், இதனையும் தாண்டி இக்கிராமங்களில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு இக்கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி சென்று வருகின்ற மாணவ மாணவியர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது, அவர்களுக்கிடையே எழுகின்ற பிரச்சனைகளே சாதீய மோதல்களுக்கு காரணமாகிறது என்பதும் தெரிய வந்தது.

மேற்படி மாணவ மாணவியர் பயணம் செய்கின்ற பேருந்துகளில் ஏற்படுகின்ற சிறு சிறு பிரச்சனைகள் முழுவதையும் கட்டுப்படுத்துவதன் மூலம் மட்டுமே இப்பகுதியில் நிரந்திர அமைதி ஏற்படுத்த முடியும் என்பதும் தெரிய வந்தது.

இதன் தொடர்ச்சியாக, பேருந்துகளில் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு, 15.04.2015 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் எம். கோட்னீஸ், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழக அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

இதில், இவ்வழித்தடங்களில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு, தனியார் பேருந்துகளில், அவர்களது சொந்த செலவிலும், அரசுப் பேருந்துகளில் நன்கொடையாளர்கள் உதவியுடனும் கேமிராக்களை பொருத்தி, பாதுகாப்பிற்காக காவலர்களை பிரத்யேகமாக நியமிப்பதென்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரால் தமிழகத்திலேயே முதல் முறையாக ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளில் பாதுகாப்பு பணிக்காக காவலர்களை நியமிக்கும் ‘பஸ் மார்ஷல்’ என்னும் முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் பிரகாரம் காவலர்கள் பேருந்தில் பொதுமக்களுடன் பயணம் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இந்த பஸ் மார்ஷல் திட்டமானது பொது மக்களுக்கு பாதுகாப்பு அளித்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

பஸ் மார்ஷல் மற்றும் கண்காணிப்பு கேமிராக்களை பேருந்துகளில் பொருத்தும் திட்டங்களினால், பொது மக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது உறுதி செய்யப்படுகிறது.

மேலும், பேருந்துகளில் சாதீய ரீதியிலான பாடல்கள் மற்றும் வாசகங்களை ஒலிபரப்பு செய்பவர்கள், உச்சரிப்பவர்கள் மற்றும் எழுதுபவர்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சனைகளை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தவும், குற்ற செயல்கள், திருட்டு, ரவுடியிசம், பெண்களை கேலி செய்தல் போன்ற வன்முறை செயல்களை கட்டுப்படுத்தவும் உண்மையிலேயே குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை மட்டும் இனம்கண்டறிந்து, அவர்கள் மீது மட்டுமே உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இக்கண்காணிப்பு கேமிராக்கள் பெரிதும் பயன்படக் கூடும்.

பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்களில் பிரச்சனைகளில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் இது உதவிகரமாக இருக்கும்.

முதற்கட்டமாக, மாவட்ட காவல் துறையின் மூலம் தமிழகத்திலேயே முதல் முறையாக இன்று (21.04.2015) செவ்வாய்க்கிழமை பேருந்துகளில் கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தியும், பாதுகாப்பிற்காக காவலர்களை நியமித்தும், குற்றங்களை கட்டுப்படுத்தும் ‘பஸ் மார்ஷல்’ என்ற இந்த முன்னோடி திட்டத்தை ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.ரவி குமார், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின். எம். கோட்னீஸ், ஆகியோர்கள் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கந்தசாமி, தூத்துக்குடி சார் ஆட்சியர் கோபால சுந்தரராஜ், ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) சி.குமார், தாசில்தார் இளங்கோ, ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் வெங்கடேஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் முத்து, ஸ்ரீவைகுண்டம் உதவி ஆய்வாளர் ஸ்டீபன் மற்றும் பொது மக்கள் திரளான அளவில் கலந்து கொண்டனர்.

பொது மக்களுக்கு கண்காணிப்பு கேமிரா இயக்கப்படும் செயல்முறை விளக்கம் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது.

தமிழகத்திலேயே முதல் முறையாக பொது மக்களின் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி மாவட்ட காவல் துறையால் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இயக்கப்படும் பேருந்துகளில் செயல்படுத்தப்படும் மேற்படி, ‘பஸ் மார்ஷல்’ திட்டத்திற்கு பொதுமக்கள் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின். எம். கோட்னீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

-பி.இசக்கி @ கணேசன்.