புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப வளாகத்தில் 2024, நவம்பர் 14 தொடங்கி 27 வரை நடைபெற்று வரும் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது, தனது அரங்கில் (கூடம் எண் 4, கடை எண் 4 எஃப்-6ஏ, முதல் தளம்) இந்த ஆண்டின் கருப்பொருளான “வளர்ச்சியடைந்த இந்தியா 2047”- க்கு இணங்க விரிவான பதிவு இயக்கத்தை நடத்துவதன் மூலம் இந்தியா முழுவதிலுமிருந்து பங்கேற்கும் விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுடன் அரசு இ-சந்தை (ஜிஇஎம்) இணைந்து உள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் இந்த இணைய தளத்தின் பங்கை வலியுறுத்தும் வகையில், சிறு அளவிலான விற்பனையாளர்களுக்கு, குறிப்பாக நெசவாளர்கள், கைவினைஞர்களுக்கு மத்திய அரசின் “ஒரு மாவட்டம், ஒரு உற்பத்தி” திட்டத்தின் கீழ், பொது கொள்முதல் தளத்தில் அவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், அரசு இ-சந்தை (ஜிஇஎம்) முழுமையான ஆதரவை வழங்க உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அரசு இ-சந்தை அரங்கில் உடனடி பொருள் பட்டியல் பதிவேற்ற வசதிக்காக, முற்றிலும் இலவசமாக தொழில்முறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமான வருடாந்தர பொதுக் கொள்முதலுக்கு நேரடி சந்தை இணைப்புகள் உட்பட இந்தப் போர்ட்டலின் பல்வேறு நன்மைகளை எடுத்துரைத்து இந்த இணையதள பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அரசு இ-சந்தை பிரதிநிதிகள் ஒவ்வொரு கடையாகப் பார்வையிடுவார்கள்.
இந்தியாவின் கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் புதுமைப் படைப்புகளின் துடிப்பான காட்சிப் பொருளாக விளங்கும் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி, அரசு மின்னணு சந்தையின் வளமான பொதுக் கொள்முதல் சந்தையில் உள்நாட்டு விற்பனையாளர்களுக்கு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும், வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய இடமாகும்.
எம்.பிரபாகரன்