அரசு மருத்துவருக்கு அடுத்து அரசுப் பள்ளியில் ஆசிரியைக் குத்திக் கொலை, என்ன நடக்கிறது இந்த திராவிட மாடல் ஆட்சியில்?- பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை ஆதங்கம்.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

அரசு மருத்துவருக்கு அடுத்ததாக, அரசுப் பள்ளியில் பட்டப்பகலில் ஆசிரியர் ஒருவரைக் கத்தியால் குத்தி படுகொலை செய்திருப்பது, இந்த திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் மெல்ல மெல்ல “கொலையுதிர் காலத்தை” நோக்கி நகர்வதையே குறிக்கிறது.

அரசுக் கட்டிடங்களுக்குள் நுழைந்து அரசுப் பணியாளர்களின் மீதே தாக்குதல் நடத்துமளவிற்கான துணிச்சலும் தைரியமும் குற்றவாளிகளுக்கு எப்படி வந்தது? இதுதான் சர்வாதிகார ஆட்சியின் லட்சணமா?

LIC-யின் தொழில்நுட்ப கோளாரைக் கண்டறிந்து உடனே கண்டன அறிக்கை விடும் தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்கள், தனது ஆட்சியில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த தவறுவது ஏன்?

சட்டம் ஒழுங்கைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக வாய்ச்சவடால் விடும் தமிழக முதல்வரின் கவனக்குறைவால், இன்னும் எத்தனை உயிர்கள் காவு வாங்கப்படும்?

“குற்றச்செயல்கள் இரும்புக்கரங்கள் கொண்டு அடக்கப்படும்” என்று கூறிய தமிழக முதல்வரின் இரும்புக் கரங்கள் துருப்பிடித்துவிட்டதா?

வெறும் விளம்பர அரசியல் மட்டுமே செய்துவரும் முதல்வர், என்றுதான் சீர்குலைந்துள்ள தமிழகத்தின் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவார்?

இந்த திராவிட மாடல் ஆட்சியில் எவருக்குமே பாதுகாப்பில்லை என்றால், அவர்களுக்கு தமிழக முதல்வர் பதவியெதற்கு?

இவ்வாறு பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply