ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 5, 2024) கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பட்டம் பெறும் நாளானது மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கான பாதைக்கு வழிவகுக்கிறது என்று கூறினார். உலக சூழலில் தங்கள் அறிவு மற்றும் திறன்களின் கடுமையான சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் மாணவர்களிடம் கூறினார். அவர்கள் பெற்ற அறிவு மற்றும் திறன்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதன்  காரணமாக  நாட்டின் நிர்மாணத்திற்கு பங்களிப்பு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.  2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நாட்டின் இலக்கிற்கு புதுமையான யோசனைகள் மற்றும் அர்ப்பணிப்பு நடவடிக்கைகள் மூலம் பங்களிக்குமாறு அவர் அவர்களை வலியுறுத்தினார்.

உணவு தானியங்களுக்காக நாம் மற்ற நாடுகளைச் சார்ந்திருந்த காலம் ஒன்று இருந்தது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இப்போது நாம் உணவு தானியங்கள் மற்றும் பிற விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம் என்று அவர் தெரிவித்தார். நமது வேளாண் விஞ்ஞானிகளின் வழிகாட்டுதல் மற்றும் நமது விவசாயிகளின் அயராத உழைப்பு ஆகியவற்றால் இது சாத்தியமானதாக அவர் குறிப்பிட்டார்.

வேளாண்மை மற்றும் விவசாயிகளின் வளர்ச்சி இல்லாமல் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் சாத்தியமில்லை என்று குடியரசுத் தலைவர் கூறினார். வேளாண்மை, மீன் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு ஆகிய அபிவிருத்தியின் மூலம் நமது பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

இயற்கை பேரழிவுகள், பருவநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகள், இயற்கை வளங்களை அதிகமாக சுரண்டுவது போன்ற புதிய சவால்களை வேளாண்மை தற்போது எதிர்கொள்கிறது என்று அவர் கூறினார். இந்த சவால்களை எதிர்கொள்ள  நமது விஞ்ஞானிகள் சரியான நேரத்தில் தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மண் வளம் பாதுகாப்பு, நீர் மற்றும் மண் பாதுகாப்பு, இயற்கை வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் பசுமை குடில் வாயுக்களின் அதிகரிப்பு போன்ற பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் வேளாண்மை உற்பத்தியை பாதிக்கின்றன என்று குடியரசுத் தலைவர் கூறினார். இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு வேளாண் விஞ்ஞானிகளுக்கு உள்ளது. ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாடு நமது வேளாண் துறைக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. மண், நீர் மற்றும் சுற்றுச்சூழலில் அவற்றின் மோசமான விளைவுகள் அனைவருக்கும் கவலை அளிக்கும் விஷயமாகும். இந்த பிரச்சினைகளுக்கு இளம் விஞ்ஞானிகள் தீர்வு காண்பார்கள் என்று குடியரசுத் தலைவர்  நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply