இரு கடலோர காவல்படைகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒத்துழைப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக இந்திய கடலோர காவல்படை, பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படையுடன் இரண்டாவது இருதரப்பு கூட்டத்தை 2024 டிசம்பர் 09 அன்று நடத்தியது. புதுதில்லியில் உள்ள கடலோரக் காவல் படை தலைமையகத்தில் நடத்தியது. கடல்சார் தேடல் மற்றும் மீட்பு, கடல்சார் சட்ட அமலாக்கம், கடல் மாசுபாடு சமாளிப்பு மற்றும் திறன் மேம்பாடு போன்ற முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கூட்டம் கவனம் செலுத்தியது.
இந்தியக் கடலோரக் காவல் படை துணை தலைமை இயக்குநர் (செயல்பாடுகள் மற்றும் கடலோர பாதுகாப்பு) அனுபம் ராய் மற்றும் நிர்வாகத்திற்கான பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையின் துணை கமாண்டன்ட் ரியர் அட்மிரல் எட்கர் எல் யபானெஸ் ஆகியோர் இந்த விவாதங்களுக்கு தலைமை தாங்கினர். பகிர்ந்து கொள்ளப்பட்ட வளங்கள் மற்றும் நிபுணத்துவம் மூலம் கடல்சார் அவசரநிலைகளுக்கு விரைவான பதிலளிப்பதை உறுதி செய்தல், கூட்டு மீட்பு மற்றும் தேடல் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான வழிகளை இரு தரப்பினரும் ஆராய்ந்தனர். கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் போன்ற நாடுகடந்த கடல்சார் குற்றங்களுக்கு தீர்வு காண்பதை வலியுறுத்தி கடல்சார் சட்ட அமலாக்கத்தில் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
கடல் மாசுபாட்டை எதிர்கொள்வதில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தையும், சுற்றுச்சூழல் ஆபத்துகளை திறம்பட சமாளிக்க பயிற்சி மற்றும் வளப் பகிர்வில் கவனம் செலுத்துவதையும் கூட்டம் எடுத்துரைத்தது. கூடுதலாக, அறிவு பரிமாற்றம், கூட்டு பயிற்சிகள் மற்றும் செயல்பாட்டு திறன்கள் மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துவதற்கான பயிற்சித் திட்டங்கள் மூலம் திறன் வளர்ப்பின் முக்கியத்துவத்தை இரு கடலோர காவல்படையினரும் வலியுறுத்தினார்.
2024 டிசம்பர் 08-ம் தேதி முதல் 12-ம் தேதி அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, நான்கு பேர் கொண்ட உயர்மட்ட தூதுக்குழு பாதுகாப்பு உற்பத்தித் துறையின் பிரதிநிதிகளை சந்தித்து ‘தற்சார்பு இந்தியா ‘ முன்முயற்சியின் கீழ் இந்தியாவின் உள்நாட்டு கப்பல் கட்டும் திறன்களைக் காணும்.
2023 ஆகஸ்ட் மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பான மற்றும் மாசு இல்லாத கடல்சார் சூழலை உறுதி செய்வதில் ஐ.சி.ஜி மற்றும் பி.சி.ஜி ஆகியவற்றின் பகிரப்பட்ட பார்வையை வலியுறுத்தின. இந்த இருதரப்பு சந்திப்பு இரு கடலோர காவல்படையினருக்கும் இடையிலான தொழில்முறை உறவை மேலும் உறுதிப்படுத்துகிறது, மேலும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கிறது மற்றும் கடல்சார் சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.
திவாஹர்