நேபாள நிலநடுக்கத்தில், காத்மாண்டு நகரில், புதைந்த வீட்டில் 3 நாட்களாக சிக்கி தவித்த ஜமுனா என்ற 102 வயது மூதாட்டியை உயிருடன் மீட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 25-ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி தப்பியுள்ளனர். ஆனால், அந்த மூதாட்டி தப்ப முடியாமல் வீட்டின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார்.
வீட்டிற்கு வெளியே இருந்த உறவினர்கள் பாட்டி இறந்துவிட்டதாக கருதியுள்ளனர். ஆனால், இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்த மூதாட்டி உணவு, தண்ணீர் இல்லாமல் ஒரே ஒரு ரொட்டியை மட்டும் வைத்துக்கொண்டு தொடர்ந்து 3 நாட்களாக அவதியுற்று வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டிற்கு வெளியே தனது உறவினர்கள் பேசிக்கொள்வதை கேட்ட மூதாட்டி, உரக்க குரல் எழுப்பியுள்ளார். அப்போது தான் அவர் உயிருடன் இருந்துள்ளது அவர்களது உறவினர்களுக்கு தெரிய வந்துள்ளது.
பின்னர், அவர்கள் பாட்டியை உயிருடன் மீட்டுள்ளனர். 3 நாட்களாக புதையுண்ட மூதாட்டி உயிருடன் மீட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
1934-ம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்திலும், 1988-ம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்திலும் இவர் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு முறை நிலநடுக்கத்தில் சிக்கும்போதும் தான் இறந்துவிட்டதாகவே நினைத்தேன். ஆனால், மூன்று நிலநடுக்கத்தில் சிக்கி உயிர் பிழைத்துள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.