தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் ஒடிசா மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் முன்முயற்சி திட்டங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 13, 2025) குடியரசுத்தலைவர் மாளிகையில் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் வருவாய்க்கும் கால்நடைகள் முக்கியப் பங்கு வகிப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் பல்வேறு வகையான கால்நடை இனங்கள் உள்ளன. அந்த இனங்கள் அனைத்தும் நாட்டின் வளமான விவசாய பாரம்பரியத்திற்கு பங்களித்துள்ளன என்று கூறினார். கால்நடைகளை வளர்ப்பதற்கும், இன மேம்பாடு, அவற்றின் மரபணு மேம்பாட்டிற்காக மத்திய அரசால் கொள்கைகள் வகுக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி துறையில் நாட்டின் சாதனைகள் அசாதாரணமானது என்றும் குடியரசுத்தலைவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் கறவை மாடுகளின் உற்பத்தித் திறனும் அசாதாரணமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த சாதனைகள் அனைத்தும் கால்நடை பராமரிப்பில் சிறந்து விளங்குவதற்கான செயல்பாடுகளை பிரதிபலிப்பதாக உள்ளது என்று கூறினார். தேசிய கோகுல் இயக்கத்தின் நோக்கங்களையும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
கால்நடைகளின் எண்ணிக்கை, சுகாதாரம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பால் உட்பட கால்நடைகளிலிருந்து பெறப்படும் உணவு பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களின் தரம் மேம்படும் என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நம்பிக்கைத் தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா