ஜம்மு காஷ்மீரில் உள்ள சோனமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.

ஜம்மு காஷ்மீரில் சோனமார்க் பகுதியில அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், ஜம்மு – காஷ்மீர் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.  “சவால்கள் இருந்த போதிலும், உறுதியான  அரசின் நடவடிக்கைகள் இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். தொழிலாளர்களின் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு, தடைகளை சமாளித்து பணிகளை நிறைவேற்றியதற்காக அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார். இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அழகிய பனி மூடிய மலைகள், ரம்மியமான வானிலை ஆகியவற்றைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் குறித்த புகைப்படங்களைப் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்  பகிர்ந்து கொண்டதையடுத்து அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் தனக்குள் அதிகரித்ததாக  பிரதமர் குறிப்பிட்டார். கட்சிப் பணியின் போது அடிக்கடி இப்பகுதிக்கு வருகை தந்த நாட்களை பிரதமர் நினைவு கூர்ந்தார். சோனாமார்க், குல்மார்க், கந்தர்பால், பாரமுல்லா போன்ற பகுதிகளில் கணிசமான நேரத்தை செலவிட்டதாகவும், பெரும்பாலும் மணிக்கணக்கில் பல கிலோமீட்டர் தூரம் நடந்தும் சென்றதாகவும் அவர் கூறினார். கடும் பனிப்பொழிவு இருந்தபோதிலும், ஜம்மு-காஷ்மீர் மக்களின் அன்பான வரவேற்பால் கடுங்குளிர் ஒரு பொருட்டாக தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று சிறப்பான தினம் என்பதை ஒப்புக் கொண்ட பிரதமர், நாடு முழுவதும் பண்டிகைச் சூழல் நிலவுவதாக குறிப்பிட்டார். பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடுவதற்காக குவிந்து வரும் மகா கும்பமேளா விழா  தொடங்கியுள்ளதை அவர் குறிப்பிட்டார். பஞ்சாப், வட இந்தியாவின் பிற பகுதிகளில் லோஹ்ரி கொண்டாட்டங்கள் குறித்தும், உத்தராயணம், மகர சங்கராந்தி, பொங்கல் போன்ற பண்டிகைகள் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த பண்டிகைகளை கொண்டாடும் அனைவருக்கும் அவர் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். பள்ளத்தாக்கில் சில்லைக்காலனின் 40 நாள் என்பது சவாலான காலம் என்பதை குறிப்பிட்ட பிரதமர், அங்கு வசிக்கும்  மக்களின் மன உறுதியையும் பாராட்டினார். இந்த பருவகாலம்  சோனாமார்க் போன்ற சுற்றுலா தலங்களுக்கு புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருவதாகவும், காஷ்மீர் மக்களின் விருந்தோம்பல் குறித்த அனுபவம்  நாடு முழுவதிலும் உள்ள  சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் ஜம்மு ரயில் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர், மக்களுக்கு இது பரிசு என்றும் அறிவித்தார். இது மக்களின் நீண்டகால கோரிக்கை என்று குறிப்பிட்ட அவர்,  ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சோனமார்க் சுரங்கப்பாதை பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டினார். இந்த சுரங்கப்பாதை சோனாமார்க், கார்கில், ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று பிரதமர் கூறினார். பனிச்சரிவுகள், கடுமையான பனிப்பொழிவு, நிலச்சரிவுகளின் போது சாலைகள் அடிக்கடி மூடப்படுவதால் ஏற்படும் சிரமங்களை இந்த சுரங்கப்பாதை குறைக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த சுரங்கப்பாதை முக்கிய மருத்துவமனைகளுக்கான அணுகலை மேம்படுத்தும் என்றும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் என்றும், இதன் மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள்  எதிர்கொள்ளும் சவால்களைக் குறைக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சோனாமார்க் சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணி 2015-ம் ஆண்டு பிஜேபி தலைமையிலான மத்திய அரசு, ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு தொடங்கியதாக பிரதமர் குறிப்பிட்டார்.   மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ், சுரங்கப் பாதையின் கட்டுமானப் பகுதிகள் நிறைவடைந்ததில் அவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். இந்த சுரங்கப்பாதை குளிர்காலத்தில் சோனாமார்க் பகுதிக்கான போக்குவரத்து  இணைப்பைப் பராமரிக்கும் என்றும் அப்பகுதியில் சுற்றுலாவை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். வரும் நாட்களில் ஜம்மு காஷ்மீரில் எண்ணற்ற சாலை, ரயில் இணைப்புத் திட்டங்கள் நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார். சோனாமார்க் அருகே மற்றொரு பெரிய இணைப்புத் திட்டம் நடைபெற்று வருவதைக் குறிப்பிட்ட பிரதமர், காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு இயக்கப்படும் ரயில் சேவைக்கான இணைப்பிற்கும் இது வழிவகுக்கும் என்று அவர் கூறினார். ஜம்மு-காஷ்மீரின் ஒரு பகுதியாக புதிய சாலைகள், ரயில்வே திட்டங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள்  அமைக்கப்பட்டு வருவதை அவர் எடுத்துரைத்தார். இந்த சுரங்கப்பாதை அப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கான புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த  நாடாக இந்தியா உருவெடுக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.  நாட்டின் எந்தவொரு பகுதியும் அல்லது குடும்பமும் பின்தங்கிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தினார். “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற உணர்வுடன் அரசு செயல்பட்டு வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் உட்பட நாடு முழுவதும் 4 கோடிக்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளன என்றும் திரு மோடி குறிப்பிட்டார். வரும் ஆண்டுகளில் ஏழைகளுக்கு கூடுதலாக 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று அவர் அறிவித்தார். இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், இத்திட்டத்தின் மூலம் ஜம்மு காஷ்மீர் மக்களும் பயனடைவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இளைஞர்களின் கல்விக்கு உதவிடும் வகையில், நாடு முழுவதும் புதிய ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், மருத்துவக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் நிறுவப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். ஜம்மு-காஷ்மீரில், கடந்த பத்தாண்டுகளில் பல உயர்நிலை கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவை அப்பகுதி இளைஞர்களுக்கு பெரிதும் பயனளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் முதல் அருணாச்சல பிரதேசம் வரை விரிவான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், ஜம்மு-காஷ்மீர் சுரங்கப்பாதைகள், உயர்மட்டப்  பாலங்கள், ரோப்வே போன்ற வசதிகளின் மையமாக மாறி வருகிறது என்றும், உலகின் மிக உயரமான சுரங்கப்பாதைகள், மிக உயர்ந்த ரயில்-சாலைப் பாலங்கள் இங்கு கட்டப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார். அண்மையில் நிறைவடைந்த செனாப் பாலத்தின் பொறியியல் அதிசயம் குறித்து பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். காஷ்மீரின் ரயில் இணைப்பை மேம்படுத்தும் கேபிள் பாலம், ஜோஜிலா, செனானி நஷ்ரி, சோனாமார்க் சுரங்கப்பாதை திட்டங்கள், உதம்பூர் – ஸ்ரீநகர் – பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களை அவர் குறிப்பிட்டார். சங்கராச்சாரியார் கோயில், ஷிவ்கோரி, பால்டால்-அமர்நாத் ரோப்வேஸ் மற்றும் கத்ரா-தில்லி விரைவுச் சாலைத் திட்டங்கள் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார். ஜம்மு-காஷ்மீரில் நான்கு தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள், இரண்டு வட்டச் சாலைகள் உட்பட ரூ.42,000 கோடிக்கும் அதிகமான இணைப்புச் சாலை  திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். சோனாமார்க் போன்ற 14-க்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருவதாகவும், இது ஜம்மு-காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா உருவெடுப்பதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறினார். ஜம்மு காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு புதிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். கடந்த பத்தாண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அமைதி மற்றும் முன்னேற்றம் குறித்து அவர் எடுத்துரைத்தார். “2024-ம் ஆண்டில், 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வருகை தந்துள்ளதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் சோனாமார்க்கில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்துள்ளதாகவும்”  திரு மோடி குறிப்பிட்டார். இந்த வளர்ச்சி உணவகங்கள், விடுதிகள், தாபாக்கள், துணிக்கடைகள், டாக்ஸி சேவைகள் உள்ளிட்ட உள்ளூர் வர்த்தகங்களுக்கு பயனளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply