77-வது ராணுவ தினமான ஜனவரி 15, 2025 அன்று, முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், இந்திய ராணுவத்தின் அனைத்து படைகளுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தை வரையறுக்கும் தளராத அர்ப்பணிப்பு, தைரியம், குன்றாத மனப்பான்மை மற்றும் தொழில்நிபுணத்துவத்தின் கொண்டாட்டம் ஆகியன இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையின் அடித்தளமாகும் என்று அவர் விடுத்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ராணுவத்தின் மரபானது சவால்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன்,இறையாண்மையை நிலைநிறுத்தல் மற்றும் தன்னலமின்றி தேசத்திற்கு சேவை செய்வதல் ஆகிய அதன் நம்பகமான திறன்களின்மீது கட்டமைக்கப்பட்டுள்ளது என்று ஜெனரல் அனில் சவுகான் கூறினார். ” எதையும் எதிர்கொள்வதற்கான தயார்நிலையைப் பராமரிப்பதிலும், செயல்பாட்டு களங்களில் சிறந்து விளங்குவதிலும், எல்லா சூழ்நிலைகளிலும் நமது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதிலும் இந்திய ராணுவ வீரர்களின் அயராத முயற்சிகள் பாராட்டத்தக்கவை” என்று அவர் குறிப்பிட்டார்.
போரின் மாறிவரும் இயக்கவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பயன்பாடு ஆகியவற்றை எடுத்துரைத்த தலைமைத் தளபதி, தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் மற்றும் மாறிவரும் புவிசார் அரசியல் இயக்கவியல் ஆகியவற்றால் நவீன போர் வேகமாக உருவாகி வருவதாகவும் கூறினார். சைபர், விண்வெளி மற்றும் அறிவாற்றல் அரங்குகள் உள்ளிட்ட புதிய களங்களில் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. “செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் தானியங்கி மற்றும் தரவு மைய கட்டமைப்பு தொழில்நுட்பங்கள், ரகசியமாக மற்றும் ஒலியின் வேகத்தை விட விரைவான வேகம் கொண்ட தொழில்நுட்பங்களால் வலுப்படுத்தப்பட்ட வேகத்தை மையமாக கொண்ட போர் முறைகள் மற்றும் தன்னியக்க வாகனங்களால் இயக்கப்படும் ரோபாட்டிக்ஸ் போன்ற புதிய தலைமுறை தொழில்நுட்பங்கள் மற்றும் கருத்தாக்கங்கள் எதிர்கால போர்கள் எவ்வாறு நடத்தப்படும் என்பதை மாற்றி அமைக்கின்றன” என்று அவர் மேலும் கூறினார்.
எதிர்காலத்தில் எந்தவொரு போரும் கடந்து போன போர் போல இருக்காது என்றும், எந்தவொரு ராணுவத்திற்கும் போர்களை வெல்வதுதான் முக்கியம் என்றும் வலியுறுத்திய ஜெனரல் அனில் சவுகான், இந்திய ராணுவத்தை தொழில்நுட்ப ரீதியாக மாற்றியமைத்து தயார்ப்படுத்த வேண்டும் என்றும், எதிரிகளை விட முன்னணியில் இருக்க அதன் உத்திகள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மேம்பட்ட தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை உட்செலுத்துவதன் மூலம் உயர் தொழில்நுட்ப அறிவு கொண்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பது காலத்தின் தேவை என்று அவர் மேலும் கூறினார்.
“இந்த சிறப்பு நாளை முன்னிட்டு, ஒவ்வொரு வீரரும் ராணுவத்தின் புகழ்பெற்ற மரபுகளை நிலைநிறுத்த உறுதியேற்க வேண்டும், அதே நேரத்தில் எதிர்கால சவால்களை உறுதியுடனும் பெருமிதத்துடனும் தழுவ வேண்டும். ராணுவம், தொடர்ந்து நமது தாய்நாட்டிற்கு அதிக வெற்றிகளையும், பெருமையையும் கொண்டு வரட்டும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அயராத பங்களிப்பை வழங்கட்டும்” என்றும் அவர் கூறினார்.
திவாஹர்