பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மூன்றாவது ஏவுதளம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மூன்றாவது ஏவுதளத் திட்டமானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த தலைமுறை செலுத்து வாகனங்களுக்கான ஏவுதள கட்டமைப்பை உருவாக்குவதோடு ஸ்ரீஹரிகோட்டாவில் இரண்டாவது ஏவுதளத்திற்கான ஆயத்த ஆதரவு ஏவுதளமாக செயல்படவும் செய்யும். இது எதிர்கால இந்திய மனித விண்வெளிப் பயணங்களுக்கான செலுத்துதல் திறனையும் மேம்படுத்தும். இந்த திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது.
செயல்படுத்தல் உத்தியும் இலக்குகளும்:
டிஎல்பி எனப்படும் மூன்றாவது ஏவுதளமானது என்ஜிஎல்வி (NGLV) மட்டுமின்றி, எல்விஎம்3 (LVM3) வாகனங்களையும் செமிக்ரையோஜெனிக் நிலை, என்ஜிஎல்வியின் (NGLV-ன்) உள்ளமைவுகளையும் ஆதரிக்கக்கூடிய உலகளாவிய உள்ளமைவைக் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்படும். முந்தைய ஏவுதளங்களை நிறுவியதிலும், தற்போதுள்ள ஏவுதள வசதிகளை அதிகபட்சமாக பகிர்ந்து கொள்வதிலும் இஸ்ரோவின் அனுபவத்தை
முழுமையாகப் பயன்படுத்தி, அதிகபட்ச தொழில்துறை பங்களிப்புடன் இது நிறைவேற்றப்படும். இது 4 வருட காலத்திற்குள் நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செலவு:
ஏவுதளம் அமைப்பது, அதனுடன் தொடர்புடைய வசதிகள் என அனைத்திற்கும் மொத்த நிதி தேவை ரூ. 3984.86 கோடியாகும்.
அடுத்த 25-30 ஆண்டுகளுக்கு அதிகரித்து வரும் விண்வெளி போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, அதிக எடை கொண்ட அடுத்த தலைமுறை செலுத்து வாகனங்களுக்கு பயன்படும் வகையிலும் மூன்றாவது ஏவுதளத்தை விரைந்து அமைப்பது மிகவும் அவசியமாகும்.
எஸ்.சதிஸ் சர்மா