பாலியல் கொடுமை ‘மேடை நகைச்சுவை’யா?”- சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி.

ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா?” என சபாநாயகர் அப்பாவுவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு, அங்கிருந்த ஞானசேகரன் என்ற நபரைக் கேலி செய்ய, அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனைக் குறிப்பிட்டு, “தம்பி ஞானசேகரன்” என்று பேசியுள்ளார். திமுக நிர்வாகியாயிற்றே, பாசம் இருக்கத் தானே செய்யும். தன்னை அறியாமல் அதனை வெளிப்படுத்தியிருக்கிறார் சபாநாயகர் அப்பாவு.

பாலியல் குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரனுக்குப் பக்கபலமாக இருந்த அந்த “சார்” யாரென்று, இன்று வரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. தமிழக அரசு இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவு அவர்களே?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அப்பாவு பேசிய பேச்சின் வீடியோவையும் தனது பதிவில் அவர் இணைத்துள்ளார்.

Leave a Reply