மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அகமதாபாத்தில் ‘இந்து ஆன்மிக மற்றும் சேவை விழா’வைத் தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்து ஆன்மிக மற்றும் சேவை விழாவை (அத்யாத்மிக் அவுர் சேவா மேளா) மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று (23.01.2025) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் தமது உரையில், ஒரே மேடையில் 200 க்கும் மேற்பட்ட சேவை அமைப்புகளை இந்த விழா ஒன்றிணைத்துள்ளது என்று எடுத்துரைத்தார். பல படையெடுப்புகளும் நீண்ட கால அடிமைத்தனமும் இருந்தபோதிலும்,  இந்திய விழுமியங்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்விழாவில் நடைபெறும் கண்காட்சியில் அஹில்யாபாய் ஹோல்கர்  தொடர்பான ஒரு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். படையெடுப்புகளின் போது சேதப்படுத்தப்பட்ட 280 க்கும் மேற்பட்ட மத இடங்களை மீட்டெடுக்க அவர் தமது வாழ்நாள் முழுவதும் பணியாற்றினார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அஹில்யாபாயின் 300-வது ஆண்டு விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருவதாகவும், இத்தகைய சூழ்நிலையில், இந்த கண்காட்சியில் அஹில்யாபாய் குறித்து அமைக்கப்பட்டுள்ள அரங்கம் குஜராத்தின் இளைஞர்களுக்கும் மகளிருக்கும் தேவையான தகவல்களை வழங்கும் என்றும் திரு அமித் ஷா கூறினார்.

பிரயாக்ராஜில் தற்போது மகா கும்பமேளா நடந்து வருவதை திரு அமித் ஷா சுட்டிக்காட்டினார். மகா கும்பமேளாவை உலகமே பிரமிப்புடன் பார்க்கிறது என்று அவர் கூறினார். கும்பமேளா உலகம் முழுவதற்குமான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கான விழாவாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். கும்பமேளாவின் போது, யாரிடமும் அவரது சாதி, மதம் அல்லது சமூகம் குறித்து கேட்கப்படுவதில்லை என்று அவர் கூறினார்.

உலகில் 170 நாடுகள் தற்போது யோகாவைப் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் திரு அமித் ஷா கூறினார். மத்தியில் ஆளும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியாவின் மொழிகளையும், மதத் தலங்களையும் வளப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். அடிமைத்தனத்தின் போது இந்தியாவில் இருந்து திருடப்பட்ட 350 க்கும் அதிகமான பாரம்பரிய சின்னங்கள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். மத்திய அரசு இந்தியாவின் கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துச் சென்றுள்ளது என்றும், இந்தப் பணிகள் தொடரும் என்றும் திரு அமித் ஷா தெரிவித்தார்.

Leave a Reply