பராக்ரம தினத்தை முன்னிட்டு மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி கலந்துரையாடினார்.

பராக்ரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இளம் மாணவர்களுடன் இன்று (23.01.2025) கலந்துரையாடினார். 2047-ம் ஆண்டுக்குள் தேசத்தின் இலக்கு என்ன என்று பிரதமர் மாணவர்களிடம் கேட்டார். அதற்கு ஒரு மாணவர் மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவை வளர்ந்த தேசமாக மாற்றுவது என்று பதிலளித்தார். 2047 ஆம் ஆண்டுக்குள் என்ற எல்லை ஏன் என்று பிரதமர் கேட்டபோது, மற்றொரு மாணவர், “இந்தியா தனது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் போது நமது தற்போதைய இளம் தலைமுறையினர் தேச சேவைக்கு தயாராக இருப்பார்கள்” என்று பதிலளித்தார்.

பின்னர் திரு நரேந்திர மோடி மாணவர்களிடம், இன்றைய தினத்தின் முக்கியத்துவம் குறித்துக் கேட்டார். அதற்கு அவர்கள், ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் என்று பதிலளித்தனர். நேதாஜி போஸ் பிறந்த நாளை முன்னிட்டு கட்டாக்கில் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெறுவதாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பின்னர் அவர் மற்றொரு மாணவியிடம் நேதாஜியின் எந்த கூற்று உங்களை மிகவும் ஊக்குவிக்கிறது என்று கேட்டார், அதற்கு அவர் “எனக்கு ரத்தம் கொடுங்கள். நான் உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்” என்று பதிலளித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக தமது நாட்டிற்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் நேதாஜி போஸ் உண்மையான தலைமையை நிரூபித்தார் என்றும், இந்த அர்ப்பணிப்பு தொடர்ந்து நம்மைப் பெரிதும் ஊக்குவிக்கிறது என்றும் மாணவி மேலும் விளக்கினார்.

நீங்கள் என்ன கருத்தில் உத்வேகத்துடன் உள்ளீர்கள் என்று பிரதமர் கேட்டார். அதற்கு மாணவி நிலையான வளர்ச்சி இலக்குகளின் ஒரு பகுதியாக தேசத்தின் கார்பன் உமிழ்வை குறைக்க உந்துதல் பெற்றதாக பதிலளித்தார். கார்பன் உமிழ்வைக் குறைக்க இந்தியாவில் என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பிரதமர் மாணவியிடம் கேட்டார். அதற்கு அந்த மாணவி மின்சார வாகனங்கள், பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று பதிலளித்தார். தில்லியில் மத்திய அரசு வழங்கிய 1,200-க்கும் மேற்பட்ட மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், மேலும் பல பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் அப்போது கூறினார்.

பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான கருவியாக பயன்படுத்தப்படும் பிரதமரின் சூரியசக்தி மேற்கூரை திட்டம் குறித்து மாணவர்களிடம் பிரதமர் விளக்கினார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வீட்டின் கூரையில் சூரிய சக்தித் தகடுகள் நிறுவப்பட்டுள்ளன என்றும், அவை சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எனவும் இதன் மூலம் மின்சார கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் பிரதமர் கூறினார். உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின்-வாகனங்களுக்கு மின்னேற்றம் செய்யவும் பயன்படுத்தலாம் என்று அவர் மேலும் கூறினார். இதன் மூலம் புதைபடிவ எரிபொருட்களுக்கான செலவை நீக்கி, மாசுபாட்டைக் கட்டுப்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டார். சொந்த பயன்பாட்டிற்குப் பிறகு வீட்டில் உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரத்தை அரசுக்கு விற்கலாம் என்றும், அரசு அதை வாங்கிக் கொண்டு அதற்குரிய பணத்தை வழங்கும் என்றும் திரு நரேந்திர மோடி மாணவர்களிடம் தெரிவித்தார். இதன் மூலம் வீட்டிலேயே மின்சாரத்தை உற்பத்தி செய்து லாபத்திற்கு விற்க முடியும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி மேலும் கூறினார்.

Leave a Reply