மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது. எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டுக்கு டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு ஒன்றிய அரசு பணிந்தது. மேலும், வேதாந்தா நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஏல உரிமை ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் ‘இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் முதல்வர் தெரிவித்துள்ளதாவது;
“நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்!
சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது!
இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
திவாஹர்