தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், கிராமப்புறங்களில் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்களை நியமிக்கவும் ஊரக சுகாதார அமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளியை நிரப்பவும் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவை வழங்குகிறது. மத்திய அரசு இந்த திட்டத்திற்கான நிதி ஒப்புதலை விதிமுறைகள் மற்றும் கிடைக்கக்கூடிய வளங்களின்படி செயல்முறைப் பதிவு வடிவத்தில் வழங்குகிறது.
இந்திய பொது சுகாதார தரநிலைகள் என்பவை மாவட்ட மருத்துவமனைகள், துணை மாவட்ட மருத்துவமனைகள், சமூக சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்கள் உள்ளிட்ட பொது சுகாதார வசதிகள் மூலம் குறைந்தபட்ச அத்தியாவசிய சேவைகளை வழங்குவதை உறுதி செய்யும் அத்தியாவசிய அளவுகோல்களாகும். இவை 2007-ல் உருவாக்கப்பட்டு 2012 மற்றும் 2022 ஆண்டுகளில் திருத்தப்பட்டது. இந்தத் தரநிலைகள் சமீபத்திய பொது சுகாதார முயற்சிகளுடன் ஒத்துப்போகின்றன மற்றும் நமது சுகாதார அமைப்புக்கு அடிப்படையானவையாகவும் உள்ளன.
ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்கள் உட்பட அனைத்து நிலை வசதிகளாலும் சுய மதிப்பீட்டை எளிதாக்குவதற்காக, 2024 ஜூன் 28 அன்று இந்தியப் பொது சுகாதார தரநிலைகளின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு திறந்த மூல கருவித்தொகுப்பு மற்றும் இணைய அடிப்படையிலான டேஷ்போர்டை (www.iphs.mohfw.gov.in) மத்திய சுகாதார அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
ஜனவரி 22, 2025 நிலவரப்படி – 93% சுகாதார அமைப்புகள்(மருத்துவமனைகள்)இதற்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. மொத்த மதிப்பீடு செய்யப்பட்ட மருத்துவமனைகளில், 55% மருத்துவமனைகள் 50% க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளன.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
திவாஹர்