உலக அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலில் ஒத்தக் கருத்துடைய நாடுகள் பரஸ்பரம் பயனடையும் வகையில், பாதுகாப்புத்துறையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை நவீன தொழில்நுட்பங்கள் வழங்கிடும் என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படைத் தளத்தில் 15-வது ஏரோ இந்தியா கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தக் கண்காட்சி நாட்டின் தொழில்துறை திறனையும், தொழில்நுட்பத்தின் மேம்பாட்டையும் உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது என்று கூறினார். இந்தியாவின் நட்பு நாடுகளுடன் உள்ள நட்புறவை மேலும் வலுப்படுத்த இது உதவிடும் என்றும் அவர் கூறினார்.
5 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், உலகின் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், அரசின் பிரதிநிதிகள், தொழில்துறை தலைவர்கள், விமானப்படை அதிகாரிகள், அறிவியலாளர்கள், பாதுகாப்புத்துறை நிபுணர்கள், புத்தொழில், கல்வி மற்றும் இதர நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.
நாட்டின் எல்லைப் பகுதிகளில் பரஸ்பர பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பராமரிப்பதற்கான ஆலோசனைகளும் பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
இந்தியா எந்தவொரு நாட்டின் மீதும் ஒரு போதும் தாக்குதல் நடத்த விரும்பியதில்லை என்றும் அமைதி மற்றும் ஸ்தரதன்மையை மட்டுமே வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
எம். பிரபாகரன்