சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தொடரின் போது அவை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், அனைத்துவிதக் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்றும் மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா இன்று வலியுறுத்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மகாராஷ்டிரா சட்டமேலவை உறுப்பினர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் உரையாற்றிய அவர், இது பொதுப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதிலும் அவற்றுக்கு தீர்வு காண்பதிலும் பரந்த கண்ணோட்டத்தை வளர்க்க உதவும் என்று கூறினார்.
சட்டப்பேரவை நடவடிக்கைகளில் உறுப்பினர்களின் பங்கேற்பு குறைந்து வருவதாலும், அதன் விளைவாக ஏற்படும் அரசியல் முடக்க நிலை குறித்தும் கவலை தெரிவித்தார். சட்டப்பேரவை கூட்டங்களின் போது, உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைவு மற்றும் அதனால் ஏற்படும் உற்பத்தித்திறன் குறைவு குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.
சட்டப்பேரவைகளில் திட்டமிட்டு அமளி ஏற்படுத்துவது அரசியலமைப்பின் ஜனநாயக உணர்வுக்கு எதிரானது என்பதைக் குறிப்பிட்ட திரு பிர்லா, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமல், கேள்வி நேரம் போன்ற பயனுள்ள நடவடிக்கைகளைப் பயன்படுத்தி பொதுப் பிரச்சனைகளை எழுப்புமாறு சட்டப்பேரவை உறுப்பினர்களை வலியுறுத்தினார். உறுப்பினர்கள் அவையில் விவாதங்களுக்கு உண்மைத் தகவல்களுடன் தயாராக வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். உறுப்பினர்கள் எவ்வளவு தயாராக இருக்கிறார்களோ, அந்த அளவிற்கு சிறப்பாக அவர்களின் பங்கேற்பு இருக்கும் என்றும், அவையின் நடவடிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் திரு பிர்லா கூறினார். சட்டமன்ற நடைமுறைகளைப் புரிந்துகொண்ட பிறகு, அவை நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்று, நன்கு கருத்துள்ள விவாதங்களில் ஈடுபடுபவரே சிறந்த சட்டப்பேரவை உறுப்பினர் என்று அவர் கூறினார்.
திவாஹர்