இந்திய குடிமை கணக்குப் பணி, இந்திய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு (நிதி மற்றும் கணக்குகள்) பணி, இந்திய ரயில்வே மேலாண்மைப் பணி (கணக்குகள்) மற்றும் இந்திய அஞ்சல் பணி ஆகியவற்றின் பயிற்சி அதிகாரிகள் குழுவினர் இன்று (பிப்ரவரி 13, 2025) குடியரசுத்தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், இளம் அதிகாரிகள் பொது நிதிகளை நிர்வகிப்பதாக இருந்தாலும் சரி அல்லது நாடு முழுவதும் தடையற்ற இணைப்பு மற்றும் தகவல்தொடர்பை உறுதி செய்வதாக இருந்தாலும் சரி, அவர்களின் செயல்பாட்டுத் திறனின் மூலம் நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு நேரடியாக பங்களிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார். புதுமை மற்றும் டிஜிட்டல் முயற்சிகளில் கவனம் செலுத்தி இந்தியா நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி பயணிக்கும்போது, அவர்களைப் போன்ற இளம் அரசு ஊழியர்கள் ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அவர் கூறினார்.
சேவை வழங்கலில் அதிக வேகம் மற்றும் செயல்திறன், அதிகரித்த வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடமை ஆகியவற்றுக்கான எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்து வருவதாகக் குடியரசுத் தலைவர் கூறினார். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அரசுத் துறைகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதன் மூலம் தங்கள் அமைப்புகளை நவீனமயமாக்கி டிஜிட்டல் மயமாக்குவது அவசியம். இயந்திரக் கற்றல், தரவு பகுப்பாய்வு, பிளாக்செயின் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவை இத்தகைய தொழில்நுட்பங்களில் அடங்கும். மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுடன் தங்களை இணைத்துக் கொள்ளவும், குடிமக்களை மையமாகக் கொண்ட, திறமையான மற்றும் வெளிப்படையான நிர்வாக அமைப்புகளை உருவாக்க பாடுபடவும் இளம் அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கு மட்டுமல்லாமல், இந்திய மக்களுக்கு அரசு சேவைகளை திறம்பட வழங்குவதற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்று குடியரசுத்தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா