சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணியின் கீழ் சமூக நீதி குறித்த இரண்டு நாள் பிராந்திய உரையாடல், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (ESIC -இஎஸ்ஐசி), 74- வது நிறுவன தின கொண்டாட்டம் ஆகியவற்றை நாளை (2025 பிப்ரவரி 24) அன்று புதுதில்லியில் மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்கிறார். தொழிலாளர் நலன் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரண்ட்லஜே, துறையின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தலைமை இயக்குநர் திரு கில்பர்ட் எஃப். ஹவுங்போ ஆகியோரும் இந்த முக்கிய சர்வதேச உரையாடலின் தொடக்க அமர்வில் கலந்து கொள்வார்கள்.
சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணி என்பது சமூக நீதியை மேம்படுத்துவதற்காக, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஒரு மைல்கல் முயற்சியாகும். 2023 நவம்பரில் தொடங்கப்பட்ட இந்தக் கூட்டணியில் குறுகிய காலத்திற்குள் 90 அரசுகள் உட்பட 336 அமைப்புகள் இணைந்துள்ளனர்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிறுவன உறுப்பினர் என்ற முறையிலும், உலகளாவிய கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர் என்ற முறையிலும், சமூக நீதிக்கான செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான கூட்டணியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக நீதியை மேம்படுத்துவதற்கு அரசுள், வணிக நிறுவனங்கள், தொழிலாளர்கள் இடையே ஒத்துழைப்பு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து, “நிலையான, உள்ளடக்கிய சமூகங்களுக்கான பொறுப்பான வணிக நடைமுறைகள்” என்ற முக்கிய முயற்சியை முன்னெடுத்துச் செல்ல இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்த சூழலில், தொழிலாளர் நலன் வேலைவாய்ப்பு அமைச்சகம், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் ஆகியவை சமூக நீதிக்கான உலகளாவிய கூட்டணியுடனும் சர்வதேச தொழிலாளர் அமைப்புடனும் இணைந்து இந்த இரண்டு நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
திறன்கள், வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துதல், பணியிடத்தில் பாலின உள்ளடக்கம், பொறுப்பான வணிக நடைமுறைகள், கண்ணியமான வேலைக்கான கார்ப்பரேட் ஆளுகை, சமூக நீதிக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் விவாதங்கள் நடைபெறும்.
இந்தியாவில் சமூகப் பாதுகாப்புக்கும் தொழிலாளர் நலனுக்குமான முன்னோடி பங்களிப்பை வழங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) 74-வது நிறுவன தினத்தை கொண்டாடுவதாகவும் இந்த நிகழ்ச்சி அமையும். நாட்டில் மிகவும் விரிவான சமூக பாதுகாப்பு திட்டத்தை நிர்வகிக்கும் இஎஸ்ஐசி, தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்களுக்கு மருத்துவ பராமரிப்பு, மகப்பேறு சலுகைகள், நிதி பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிறுவன நாள் கொண்டாட்டங்கள், இஎஸ்ஐசி நிறுவனத்தின் சேவைகளை வலுப்படுத்துவதற்கான எதிர்கால திட்டத்தை முன்னிலைப்படுத்தும்.
கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள், மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் அதிகாரிகள், தொழிலாளர் அமைப்புகள், கல்வியாளர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் தொடக்க அமர்வில் பங்கேற்பார்கள்.
எஸ்.சதிஸ் சர்மா