பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க பொது செயலாளர் ஜெ.ஜெயலலிதாவுக்கு நூறு கோடி ரூபாய் அபராதமும், நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா பத்துக்கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பிற்கு வலுச்சேர்க்கும் வகையில், அதற்கான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் விளக்கி 1,136 பக்கத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை உணர்ச்சி பொங்க தமது தீர்ப்பில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா குறிப்பிட்டு இருந்தார்.
பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, ஒரு முறை தீர்ப்பு அளித்தால், அந்த வழக்கு அடுத்தடுத்து உயர் நீதிமன்றங்களை அணுகினாலும் தோல்வியே அடையும். அந்த அளவுக்கு திருத்த முடியாத தீர்ப்புக்களை வழங்குவதில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கெட்டிக்காரர். ஜெ.ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்பின் இறுதி வடிவத்தை தனது கைப்படவே திருத்தி, தட்டச்சு செய்துள்ளார்.
நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா மனிதருள் புனிதர், நீதி தேவதையின் மூத்த மகன், கறைப்படாத கரத்திற்கு சொந்தக்காரர், ஊழலை ஒழிக்க வந்த உத்தமன்.. என்று ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகளான மு.கருணாநிதி, சுப்ரமணியன் சுவாமி போன்றவர்கள் மட்டும் சொல்லவில்லை.
இந்தியாவில் உள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஊடகங்களை தவிர, டீக்கடை பத்திரிகை “தினத்தந்தி” உள்பட அனைத்து ஊடகங்களும் வரிந்து கட்டிக் கொண்டு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவிற்கு வாழ்த்து மழை பொழிந்தன.
இதில் விகடன் குழுமத்தின் ஊடகங்களும், தினமலர் குழுமத்தின் ஊடகங்களும், தாங்கள் செய்வது நீதி மன்ற அவமதிப்பு குற்றம் என்று தெரிந்தே, தீர்ப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வகையில் தினந்தோறும் தொடர் கதை வெளியிட்டன.
நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை கேட்டு மு.கருணாநிதி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோர் மகிழ்ச்சி அடைந்ததை விட, அதிகம் சந்தோஷப்பட்டவர்கள் விகடன் குழுமத்தினரும், தினமலர் குழுமத்தினரும்தான்.
ஆனால், தமிழக மக்களும், உலகமெங்கும் உள்ள தமிழ்மக்களும் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை ரசிக்கவுமில்லை, இது நேர்மையான தீர்ப்பு என்று நம்பவுமில்லை. ஜெ.ஜெயலலிதா என்ற தனிநபர் தண்டணை பெற்றதாக நடுநிலையாளர்கள் யாரும் நினைக்கவில்லை. ஒட்டு மொத்த தமிழகமும் தண்டிக்கப்பட்டதாகதான் உணர்ந்தார்கள், உணர்ச்சி வசப்பட்டார்கள்.
நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பு, நூறு சதவீதம் பொய் என்பதை, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தனது சட்டப்பூர்வமான தீர்ப்பின் மூலம் இப்போது நிரூபித்துள்ளார்.
நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில், முக்கிய கூட்டல் கணக்கு தவறுகள் இருப்பதாக, மு.கருணாநிதி, சுப்ரமணியன் சுவாமி, தமிழக எதிர்க்கட்சி தலைவர் நடிகர் விஜயகாந்த், மற்றும் கர்நாடகா அரசு வக்கீல் ஆச்சார்யா ஆகியோர் கூறி வருகின்றனர்.
அய்யய்யோ! ஜெ.ஜெயலலிதா விடுதலை ஆகிவிட்டாரே! தமிழக மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தலாம் என்ற நமது கனவில் மண் விழுந்து விட்டதே!- என்று திமுக தலைவர் மு.கருணாநிதி புலம்புவதை போல, ஆதங்கப்படாமல் நீதிபதி குமாரசாமி வழங்கிய 919 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பை நடு நிலையோடு வாசித்து பாருங்கள். படித்த பிறகு, மல்லாக்காப்படுத்து மனச்சாட்சியோடு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. தீர்ப்பை நீதிபதி குமாரசாமி எப்படி தெளிவாக வழங்கி இருக்கிறார் என்ற உண்மை உங்களுக்கு தெரியவரும்.
தீர்ப்பின் 852 ஆம் பக்கத்தை மட்டும் வாசித்து விட்டு உளறாமல், அதற்கு முந்தைய பக்கங்களையும் கவனமாக படியுங்கள். பிறகு கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு சரியாய் வரும்.
நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா வெளியிட்ட 1,136 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், 665-வது பக்கத்தில் தங்கம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெ.ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 20,548 கிராம் தங்கத்தின் மதிப்பு ஒரு கிராமுக்கு 433 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மொத்த தொகை ரூ.88,97,284 (என்பத்தெட்டு லட்சத்து தொன்னூற்றி ஏழாயிரத்து இருநூற்றி எண்பத்தி நான்கு) என்பதுதான் சரியானக் கணக்கு.
ஆனால், நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா 20548 x Rs.433/- = Rs.8,90,55,032/- இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதாவது எட்டு கோடியே தொண்நூறு லட்சத்து ஐம்பத்தைந்தாயிரத்து முப்பத்தி இரண்டு என்று தவறாக குறிப்பிட்டுள்ளார். ஆக ஜெ.ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பில் 8,01,57,748 எட்டு கோடியே ஒரு லட்சத்து ஐம்பத்தி ஏழாயிரத்து எழு நூற்றி நாற்பத்தி எட்டு ரூபாய் கூடுதலாக நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா குறிப்பிட்டுள்ளார்.
இதோ அதற்கான ஆதாரம்:
இதுதான் தீர்ப்பின் இறுதி வடிவத்தை நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தனது கைப்படவே திருத்தி, தட்டச்சு செய்த லட்சணமா? இவர்தான் கறைப்படாத கரத்திற்கு சொந்தக்காரரா? இவர்தான் திருத்த முடியாத தீர்ப்புக்களை வழங்கியவரா? இவர்தான் ஊழலை ஒழிக்க வந்த உத்தமனா?
நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை, தமிழில் மொழிப்பெயர்த்து, தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் தினந்தோறும் தொடராக வெளியிட்ட மு.கருணாநிதிக்கு இது தெரியுமா, தெரியாதா?
இந்த இந்திய தேசத்தில், கொலை குற்றத்தில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு கூட, காலை நேரத்தில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உடனே, ஜாமின் பெறுவதற்கான வாய்ப்பும், போதிய அவகாசமும், வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், ஜெ.ஜெயலலிதாவிற்கு, விடுமுறை நாளில், மாலை நேரத்தில் தீர்ப்பு! தீர்ப்பிற்கு பிறகு ஒரு வாரக்காலம் தொடர் விடுமுறை! நூறு கோடி ரூபாய் அபராதம், நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை! அப்பப்பா! எதிரி நாட்டுகாரர்களுக்கு கூட, இது போன்ற நிலமை இனி ஏற்படக் கூடாது.
ஜெ.ஜெயலலிதாவிற்கு, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா வழங்கிய சட்டவிரோதமான, தவறானத் தீர்ப்பால், தமிழகமும், தமிழக மக்களும் மிகப்பெரிய இழப்பையும், அவமானத்தையும் சந்தித்து உள்ளனர். நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவின் சட்டவிரோதமான, தவறானத் தீர்ப்பால், இதுவரை 245-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
தமிழ் நாட்டின் முதலமைச்சராகவும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினராகவும், பெங்களூர் தனி நீதிமன்றத்திதிற்கு சென்ற ஜெ.ஜெயலலிதாவை, நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தனது சட்டவிரோதமான, தவறானத் தீர்ப்பால், அவருடைய பதவிகளை பறித்து, அவர் காரில் இருந்த தேசிய கொடியை அப்புறப்படுத்தி, ஜெ.ஜெயலலிதாவை மட்டுமல்ல, இந்த இந்திய தேசத்தையே அவமானப்படுத்தியுள்ளார்.
வாயில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள், வில்லில் இருந்து ஏவப்பட்ட அம்பு, கடந்து போன காலம், உடலில் இருந்து போன உயிர், பட்ட அவமானம், இழந்த நிம்மதி… இவற்றைத் திரும்பப் பெறுவது என்பது இயலாத ஒன்று. இதற்கு ஈடாக எதையும் வழங்கவும் இயலாது.
இதற்கு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா என்ன பதில் சொல்ல போகிறார்?
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in