நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி நடந்து வருகிறது. கூட்டத்திற்கு முதல்வர் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். பின்னர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்;

ஜெயக்குமார்
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.2% என்பதை குறைக்கக் கூடாது என்று தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்று ஜெயக்குமார் கூறினார்.

திருமாவளவன்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில்; தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கை குழு’வை விசிக வரவேற்கிறது. தென்மாநிலங்களவை பிரதிநிதித்துவம், நிதி ஆணையத்தின் வரி வருவாய்ப் பகிர்வு முறை குறித்தும் விவாதம் தேவை. அமெரிக்காவில் இருப்பது போல அனைத்து மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் உறுப்பினரை அளிக்க வேண்டும். நிதி ஆணையம் வரி வருவாயைப் பகிர்ந்து கொள்வதற்கு கடைபிடிக்கும் அம்சத்தால் தென் மாநிலங்கள் பாதிப்பு. தொகுதி மறுவரையறையில் தலித், சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக் கூடாது என்று கூறினார்.

ராமதாஸ்;
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்; தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் அனைத்து தென் மாநில முதலமைச்சர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச வேண்டும்” ஒருமித்த கருத்தை உருவாக்கி ஒரு கூட்டமைப்பாக சென்று நாம் வலியுறுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது, அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் என்று கூறினார்.

செல்வப்பெருந்தகை
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான தீர்மானத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. தென்னிந்திய எம்.பி.க்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதற்கான நடவடிக்கையை விரைவில் மேற்கொள்க என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட்மாநிலச் செயலாளர் முத்தரசன் பேசுகையில்; எதிர்காலத்தில் ஒரு ஆபத்து உள்ளது அதை வரவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கையை வரவேற்கிறோம். ஒன்றிய அரசிடம் வெளிப்படைதன்மை இல்லை, எல்லாவற்றிலும் மர்மமாக உள்ளது; மிகச் சிறப்பான நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாடு பெற்றுள்ளது என்று கூறினார்.

வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில்; மத்தியில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நிலைதான் உள்ளது. அனைத்துகட்சி கூட்டம் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள சரியான முடிவு என்று கூறினார்.

பழ.நெடுமாறன்
எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநில முதல்வர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச வேண்டும் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் முடிவுக்கு எதிராக கூட்டம் நடைபெறுகிறது என்று கூறினார்.

கீ.வீரமணி
தென் மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை விரைவில்
கூட்ட வேண்டும் என கீ.வீரமணி தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வுக்கு சொந்தமாக முடிவு எடுக்கும் உரிமை கிடையாது, ஆர்.எஸ்.எஸ்.தான் அந்த முடிவை எடுக்கும். தமிழ்நாட்டின் நலனை பாதுகாக்க தவறமாட்டோம் என்பதை கூட்டத்தில் பங்கேற்காத கட்சிகள் உணர வேண்டும் என்று கூறினார்.

கமல்ஹாசன்
ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவமும் தேசிய அளவில் நிலைபெற்று இருக்க தற்போதுள்ள எம்.பி.க்களே போதுமானது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். “ஜனநாயகம், கூட்டாட்சி இரண்டும் நம் இரண்டு கண்கள். இவை தேசிய அளவில் நிலைபெற்று இருக்க தற்போதைய எம்.பி.க்கள் எண்ணிக்கையே போதுமானது. எனவே, தொகுதி மறுசீரமைப்பு முயற்சி தேவையற்றது. தேர்தல் வரும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டுக்கான உரிய நிதியை வழங்காதது, மும்மொழிக்கொள்கை அமல்படுத்துவது ” இதையெல்லாம் பார்த்தால் எதேச்சதிகார போக்குதான் தெரிகிறது எனவும் கூறினார்.

ஜெகன்மூர்த்தி
தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தால், பட்டியல் சமூக மக்களின் தொகுதிகள் குறையும் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். பட்டியல் சமூக மக்களின் தொகுதிகள் குறையும் என்பதால் தொகுதி மறுசீரமைப்பை புரட்சி பாரதம் கட்சி எதிர்க்கிறது என்று கூறினார்.

ஜவாஹிருல்லா
புரோரேட்டா என்ற வரையறையில் குழப்பம் உள்ளது; மாநில எம்.பி. எண்ணிக்கை குறையவில்லை என்பது பிரச்சனை இல்லை என்றும், வடமாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் அது பிரச்சனை என்றும் மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Leave a Reply