இந்தியா – நியூசிலாந்து கூட்டறிக்கை..!

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸன் 2025 மார்ச் 16 முதல் 20-ம் தேதி வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். நியூசிலாந்து பிரதமராகப் பொறுப்பெற்ற பிறகு, இந்தியாவிற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் லக்சன், புதுதில்லி, மும்பை நகரங்களுக்கு செல்கிறார். அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு லூயிஸ் அப்ஸ்டன், விளையாட்டுத்துறை அமைச்சர் திரு மார்க் மிட்செல், வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு டோட் மெக்லே, ஆகியோர் அவருடன் வந்துள்ளனர். மேலும், அந்நாட்டு அதிகாரிகள், வர்த்தகர்கள், சமூக புலம்பெயர்ந்தோர், ஊடகம் மற்றும் கலாச்சார குழுக்களின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலைத் தூதுக்குழுவும் இந்தியா வந்துள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் லக்சனுக்கு புதுதில்லியில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் திரு. லக்சனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். புதுதில்லியில் நடைபெறும் 10-வது ரைசினா மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி 17 மார்ச் 2025-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் லக்சன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு தொடக்க உரையாற்றுகிறார். முன்னதாக ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவையும் சந்தித்துப் பேசினார்.

ஜனநாயக நடைமுறைகள், வலுவான மக்கள் தொடர்பு, ஆகியவற்றில் இந்தியா-நியூசிலாந்துக்கு இடையே வளர்ந்து வரும் இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்துவது என இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர். இருநாடுகளும்   இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும், அவர்கள் ஆலோசித்தனர். வர்த்தகம், முதலீடு, ராணுவம், பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், விண்வெளி, மக்கள் தொடர்பு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது என ஒப்புக்கொண்டனர்.

பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச மேம்பாடு குறித்து இருதலைவர்களும் தங்களது கருத்துகளைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டதுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது எனவும் ஒப்புக்கொண்டனர். அதிகரித்து வரும் நிலையற்ற சூழல் மற்றும் மோதல் போக்குகளை எதிர்கொள்வதற்கான வழிவகைகள் குறித்தும் இருதலைவர்களும் உணர்ந்துள்ளனர். கடல்சார் பாதுகாப்பில் இந்தியா – நியூசிலாந்து நாடுகளிடையே நீடித்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது எனவும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வலுவான நடவடிக்கைகளுடன் பரஸ்பரம் இருநாடுகளுக்கும் பொதுவான நலன்களைக் கொண்டுள்ளன என்றும், அந்தப் பகுதியில் சர்வதேச சட்டத்தின் கீழ், அமைதியான சூழல் ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சர்வதேச சட்ட விதிமுறைகளின் படி குறிப்பாக 1982-ம் ஆண்டு ஐநா அவையின் கடல்சார் சட்ட உடன்படிக்கைக்கு ஏற்ப, சுதந்திரமான கடல்வழி மற்றும் வான்வழிப் போக்குவரத்து, இதர சட்டப்பூர்வ பயன்பாடுகளுக்கான உரிமைகளை இருநாட்டு பிரதமர்களும் மீண்டும் உறுதி செய்தனர். சர்வதேச சட்ட விதிமுறைகளின்படி, நாடுகளிடையேயான விவகாரங்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இருநாட்டு பிரதமர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.

தனது அரசுமுறைப் பயணத்தின்போது இந்தியா அளித்த அன்பான உபசரிப்புக்காகப் பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் நியூசிலாந்து பிரதமர் லக்ஸன் நன்றி தெரிவித்துக் கொண்டார். நியூசிலாந்துக்கு வருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு பிரதமர் திரு லக்ஸன் அழைப்பு விடுத்தார்.

Leave a Reply