புதிய அரசு மீது மக்களின் எதிர்பார்ப்புகளும், விருப்பங்களும் மிக அதிகமாக இருப்பதால், தில்லி சட்டப்பேரவையை மாதிரிச் சட்டப்பேரவையாக மாற்றுமாறு மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி சட்டப் பேரவை உறுப்பினர்களை வலியுறுத்தினார். தில்லியின் மக்கள் பிரதிநிதிகள் தில்லி மக்களுக்குப் பணியாற்றக் கடமைப்பட்டவர்கள் என்றும் அதை சமயம் நாடு அவர்களின் பணியைக் கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குப் புதுமையான தீர்வுகளைக் காணவும், போட்டி மனப்பான்மையுடன் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய திரு பிர்லா, மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை புத்தாக்கமாகத் தீர்த்து வைப்பதைச் சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்துவதே சட்டப் பேரவை உறுப்பினர்களின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார். தில்லியில் இருந்து வெளிவரும் தீர்வுகள் தில்லிக்கு சேவை செய்வது மட்டுமல்லாமல், நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் சட்டப் பேரவை அமைப்புகளுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும் என்று அவர் மேலும் கூறினார்.
உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளை கவனிப்பதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக தில்லியின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார். பல்வேறு மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்த இந்தியாவின் ஒரு நுண்ணிய வடிவம்தான் தில்லி என்று குறிப்பிட்ட திரு பிர்லா, இந்த மாறுபட்ட விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பொறுப்பு என்று கூறினார். தில்லி சட்டப் பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்ற தில்லி சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்கப் பயிற்சி திட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய போது திரு. பிர்லா இதனை தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்