மும்பையில் இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிப் பாதையின் மையமாக ரிசர்வ் வங்கி உள்ளதாகக் கூறினார். சுதந்திரத்திற்கு முன்பு வறுமையால் பாதிக்கப்பட்ட காலம் முதல் உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் காலம் வரை, நாட்டின் முழு வளர்ச்சிப் பயணத்தின் சாட்சியாக ரிசர்வ் வங்கி உள்ளது என்றார்.
நாட்டின் சாதாரண குடிமக்களுக்கு ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்ட பெயரைத் தவிர, வேறு எந்த தொடர்பும் ரிசர்வ் வங்கியுடன் இல்லை என்றாலும், மறைமுகமாக அவர்களின் அனைத்து நிதி பரிவர்த்தனைகளும், வங்கிகள், பிற நிறுவனங்கள் மூலம், ரிசர்வ் வங்கியால்தான் நிர்வகிக்கப்படுகின்றன என்பதைக் குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார். மேலும் நாட்டு மக்கள் அனைவரும் இயல்பாகவே ரிசர்வ் வங்கியின் நிதி மேற்பார்வையின்
மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளதாகவும், இது, ரிசர்வ் வங்கியின் மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கூறினார். 1990களில் பொருளாதார தாராளமயமாக்கல் முதல் கோவிட்-19 தொற்றுநோய் காலம் வரையிலான முக்கிய சவால்களுக்கு விரைவான தீர்வுகள், மீள்தன்மை, அதன் தகவமைப்புத் திறனை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் அதிகரித்து வரும் உலகமயமாக்கல், எந்தவொரு பாதகமான சர்வதேச சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவின் நிதி அமைப்பு மீள்தன்மையுடன் இருப்பதை ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் உறுதி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளில் இந்தியாவை உலகளாவிய தலைவராக மாற்றுவதில் ரிசர்வ் வங்கி முக்கிய பங்கு வகித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் கட்டண உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதன் மூலம், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தடையற்றதாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், யூபிஐ போன்ற புதுமையான நிதி பரிவர்த்தனை முறையைப் புரட்சிகரமாக மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்ததன் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நெருங்கி வரும் நிலையில், ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047 இலக்கு புதுமையான, தகவமைப்பு மற்றும் அனைவருக்கும் அணுகக்கூடிய நிதி சூழலை எதிர்கொண்டுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். உறுதியான அர்ப்பணிப்புடன், நம்பிக்கையை வலுப்படுத்தி, இந்தியாவை செழிப்பு மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கி வழிநடத்தும் வலிமையான தூணாக ரிசர்வ் வங்கி தொடர்ந்து இருக்கும் என்று குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா