சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுக்கா, பிலியூர் கிராமத்தில் கணிணி இ-சேவை மையம் கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை ஓமலூர் பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவர் டெண்டர் எடுத்து செய்து வருகிறார்.
இன்று இந்த கட்டிடத்தின் ஓரத்தில் உள்ள மண்ணை வெட்டி எடுக்கும் பணியில் பிலியூர் கிராமத்தை சேர்ந்த ராஜ் என்பவர் மகன் ரமேஷ்(வயது23), மலையன் மகன் ராஜேந்திரன் (வயது 42) ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, மதியம் 2 மணியளவில் கட்டிடத்திற்கு அருகில் இருந்த 25 அடி உயர மண் திட்டு சரிந்து விழுந்துள்ளது. இந்த மண் சரிவின் இடிபாட்டில் சிக்கி ரமேஷ் மூச்சு, பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். ராஜேந்திரன் உடலில் ரத்த காயம் ஏற்பட்டு கத்தியுள்ளார்.
அப்போது ராஜேந்திரன் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொது மக்கள் அவர்களை மீட்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு ரமேஷை பரிசோதனை செய்த மருத்துவர் ரமேஷ் இறந்து விட்டதாக கூறி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராஜேந்திரன் கை மற்றும் தலையில் ஏற்பட்டுள்ள படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இறந்து போன ரமேஷின் தந்தை ராஜ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் இறந்துள்ளார். ரமேஷ் உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை.
இது குறித்து தகவ்ல் அறிந்த ஏற்காடு இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-நவீன் குமார்.